கொரோனா அச்சுறுத்தல்; ஜெர்மனியில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு


கொரோனா அச்சுறுத்தல்; ஜெர்மனியில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
x
தினத்தந்தி 30 July 2021 5:22 PM GMT (Updated: 30 July 2021 5:22 PM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனியில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பெர்லின்,

ஜெர்மனியில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஜூலை மாத துவக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் புதிதாக 2,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில், 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

அதிலும் குறிப்பாக கடந்த வாரம் உறுதியான தினசரி தொற்று பாதிப்புகளில் 500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஸ்பெயின் மற்றும் துருக்கி நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ஜெர்மனிக்கு வரும் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலா பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெர்மனிக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு இந்த விதிகள் அமலில் உள்ளது. 

தற்போது சாலை, ரெயில் மற்றும் கடல் மூலம் ஜெர்மனிக்கு வரும் பயணிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்று ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story