ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானங்கள் மூலம் ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் மீட்பு


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானங்கள் மூலம் ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் மீட்பு
x
தினத்தந்தி 20 Aug 2021 3:25 PM GMT (Updated: 20 Aug 2021 3:25 PM GMT)

அமெரிக்க விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலீபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபுல் உள்பட பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் விமானத்தில் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்து ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வெளிநாடுகளில் வாழும் ஆப்கான் மக்கள் தாங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறி வருகின்றனர். 

தலீபான்கள் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், ஆப்கானிஸ்தானில் வாழும் வெளிநாட்டவர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், வெளிநாட்டு தூதரகங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாட்டு அரசுகள் தங்கள் நாட்டு மக்களையும், தூதரக அதிகாரிகளையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்க அரசு சார்பில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அங்கு பணியாற்றிய தங்கள் நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள், வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் என பலரையும் அமெரிக்க அரசு விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது.

இதுகுறித்து இன்றுஅமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பிறகு தொடர்ந்து அமெரிக்க மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து இதுவரை 14 ஆயிரம் பேர் அமெரிக்கா திரும்பியுள்ளனர். ஆகஸ்ட் 14-ம் தேதியில் இருந்து 9,000 பேர் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 11 விமானப்படை விமானங்கள் காபூலில் இருந்து இயக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 3,000 அமெரிக்கர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.”

இவ்வாறு வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story