சிறுவர்கள் வாரத்துக்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் கேம் விளையாடலாம்: சீனாவில் புதிய கட்டுப்பாடு!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 Aug 2021 9:52 PM GMT (Updated: 30 Aug 2021 9:52 PM GMT)

சிறுவர்கள் வாரத்துக்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் கேம் விளையாடலாம் என்று சீனாவில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பீஜிங், 

நவீன ஆன்லைன் தொழில்நுட்பங்கள் நமது வாழ்வை வசதியாகவும், எளிதாகவும் மாற்றியிருக்கின்றன. அதேநேரம், உடல் உழைப்பு குறைவு, சக மனிதர்களுடன் கலந்து பழக ஆர்வமின்மை போன்ற விரும்பத்தகாத பக்கவிளைவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக இளம் வயதினர், வன்முறை, வெறித்தனம் நிறைந்த நவீன ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமைகளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக சவுக்கை தூக்கியிருக்கிறது, சீன அரசு. அங்கு, சிறுவர்கள் வாரத்துக்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் கேம் விளையாடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் அமலுக்கு வரும் இந்தக் கட்டுப்பாட்டால், சிறார்-சிறுமியர் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொது விடுமுறை நாட்களிலும் மட்டும் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடலாம்.

கடந்த 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முந்தைய கட்டுப்பாட்டின்படி, சிறுவர்கள் தினமும் ஒன்றரை மணி நேரமும், விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் ஆன்லைன் கேம் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சீன அரசின் தற்போதைய அதிரடி அறிவிப்பு, ஆன்லைன் விளையாட்டுகளில் பெரும்பூதங்களாய் விளங்கும் அந்நாட்டின் பிரமாண்ட தொழில்நுட்ப நிறுவனங்களை பாதித்திருக்கிறது. அவற்றின் பங்கு மதிப்பு உடனடி சரிவை சந்தித்திருக்கிறது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறைப்படி கடைப்பிடிக்கின்றனவா என்று தீவிரமாக கண்காணிக்கவும் போகிறோம் என்று சீன அரசு எச்சரித்திருக்கிறது.

தொழில்நுட்பத்தில் குதிரைப் பாய்ச்சலில் வளர்ச்சி கண்டுவரும் சீனா, தற்போது அதற்கு கடிவாளம் போடத் தொடங்கியிருக்கிறது. அங்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாது, மின் வணிகம் மற்றும் ஆன்லைன் கல்வி நிறுவனங்களையும் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆன்லைன் கல்வி பயிற்சி நிறுவனங்கள், முக்கியமான பள்ளி பாடங்களுக்கு இணையவழியில் பாடம் நடத்துவதற்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. இதனால், கல்வி ‘பிசினசில்’ கோடி கோடியாய் கல்லா கட்டிவந்த பெரும் கல்வி நிறுவனங்கள் கலங்கிப்போய்விட்டன.


Next Story