அமெரிக்காவில் பாலத்தின் அடியில் தங்கியுள்ள 10 ஆயிரம் அகதிகள்


அமெரிக்காவில் பாலத்தின் அடியில் தங்கியுள்ள 10 ஆயிரம் அகதிகள்
x
தினத்தந்தி 19 Sep 2021 12:15 PM GMT (Updated: 19 Sep 2021 12:15 PM GMT)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லையில் உள்ள பாலத்தின் கீழ் சுமார் 10 ஆயிரம் அகதிகள் குவிந்துள்ளனர்.

வாஷிங்டன்,

தென் அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக நுழைவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதிவேற்ற பின், அகதிகள் தொடர்பாக டிரம்ப் அரசு விடுத்திருந்த பல கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தினார். இதன் பின்னர் அமெரிக்காவிற்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் எல்லையில் அமைந்திருக்கும் டெல் ரியோ நகரின் நெடுஞ்சாலைப் பாலத்தின் அடியில் சுமார் 10 ஆயிரம் அகதிகள் குவிந்துள்ளனர். ஹைதி, வெனிசுலா, கியூபா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இவர்கள் ரியோ கிராண்டி ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். 

அவ்வாறு நுழைந்திருக்கும் அகதிகளுக்கு குடிநீர், கழிப்பிடம், துண்டுகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக டெல் ரியோ நகரின் எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் போதுமான உணவு கிடைக்காததால், சிலர் மீண்டும் ரியோ கிராண்டி ஆற்றைக் கடந்து மெக்சிகோவிற்கு சென்று, உணவு உள்ளிட்டவற்றை சேகரித்துக் கொண்டு மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அடுத்த 5 நாட்களில் இவர்கள் அனைவரும் அகதிகள் முகாமிற்கு அனுப்பப்பட உள்ளனர். ஆகஸ்ட் மாத்தில் மட்டும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைந்த 1.95 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story