அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவு - இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி


அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவு - இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Sep 2021 8:22 PM GMT (Updated: 25 Sep 2021 11:25 PM GMT)

அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்ததையடுத்து விமானம் மூலம் பிரதமர் மோடி இந்தியாவிற்கு புறப்பட்டார்.

நியூயார்க்,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 22-ந் தேதி காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அமெரிக்காவைச் சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

இதனை தொடர்ந்து வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி சென்ற போது, அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் இந்திய கொடியை உயர்த்தி பிடித்தபடி அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் வெள்ளை மாளிகையில்  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார். 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அவரை முதல் முறையாக பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இருநாட்டு உறவிலும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குவாட் மாநாடில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர் நியூயார்க் வந்த பிரதமர் மோடி, இந்திய நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு ஐ.நா. பொது சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் உரையாற்றினார். இதில் கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் நிலவரம் ஆகியவை குறித்து அவர் பேசினார். 

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்றதுடன் அவரது அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்த பிறகு நேற்று இரவு நியூயார்க்கில் உள்ள ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையம் வந்த மோடி, அங்கிருந்து விமானத்தில் இந்தியாவிற்கு புறப்பட்டார். நாளை காலை 11.30 மணியளவில் டெல்லி வந்தடைகிறார்.

Next Story