சர்ச்சைக்குரிய பகுதியில் விறகு எடுக்க சென்றதால் இரு தரப்பினர் இடையே மோதல் - 15 பேர் பலி


சர்ச்சைக்குரிய பகுதியில் விறகு எடுக்க சென்றதால் இரு தரப்பினர் இடையே மோதல் - 15 பேர் பலி
x
தினத்தந்தி 25 Oct 2021 12:03 PM GMT (Updated: 25 Oct 2021 12:03 PM GMT)

பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய பகுதியில் விறகு எடுக்க சென்றதால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

காபூல்,

பாகிஸ்தானின் கைபர்-பக்துவாம் மாகாணம் குர்ரம் மாவட்டத்தில் ஹைடு மற்றும் பிவர் ஆகிய இரண்டு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இரு தரப்பினரும் குர்ரம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியை தங்களுக்கு சொந்தமானது என கருதுகின்றனர். இதனால், வனப்பகுதி தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அம்மாவட்டத்தில் தெரீ மேகல் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை பிவர் இன பழங்குடி மக்கள் விறகு எடுக்க சென்றிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஹைடு இன பழங்குடி மக்களில் சிலர் இது தங்களுக்கு சொந்தமான பகுதி என்று இங்கு விறகு எடுக்கக்கூடாது என்றும் பிவர் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பிவர்  இன மக்கள் மீது ஹைடு பழங்குடியினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிலர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு பழங்குடியின மக்கள் இடையேயும் வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் ஒவ்வொரு கிராமத்திற்கும் புகுந்து மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குர்ரம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வதந்திகள் பரவுவதை தடுக்க செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.          

Next Story