உலக செய்திகள்

டென்னிஸ் வீராங்கனை விவகாரம்: ‘வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்பட்டது’ - சீனா காட்டம்! + "||" + China Says Tennis Star Peng Shuai's Case "Maliciously Hyped Up"

டென்னிஸ் வீராங்கனை விவகாரம்: ‘வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்பட்டது’ - சீனா காட்டம்!

டென்னிஸ் வீராங்கனை விவகாரம்: ‘வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்பட்டது’ - சீனா காட்டம்!
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் தொலைந்து போனதாக எழுந்த குற்றச்சாட்டில் சீனா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
பீஜிங்,

சீனாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் (வயது 35), இவர் கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அண்மையில் இவர்  அந்த நாட்டின் முன்னாள் துணை பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி மீது சமூக வலைத்தளம் மூலம் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.

இந்த குற்றச்சாட்டை வெளியிட்ட நாள் முதல் பெங் சூவாய் மாயமானார். அவரின் கதி என்ன? என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்தது. அவர் மாயமானதன் பின்னணியில் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு பங்கு இருக்கலாம் என்கிற சந்தேகம் நிலவியதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இதனிடையே பெங் சூவாயின் பாதுகாப்பு மற்றும் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து உண்மையான ஆதாரங்களை அளிக்குமாறு சீனாவை ஐ.நா.வும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளும் வலியுறுத்தி வந்தன. இது சீன அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெங் சூவாய் பாதுகாப்பாக இருப்பதை காட்டும் வீடியோ ஒன்றை சீன அரசு ஊடகம் இணையத்தில் வெளியிட்டது. சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற ஒரு டென்னிஸ் போட்டியின் தொடக்க விழாவில் பெங் சூவாய் கலந்து கொண்டதாக கூறி அந்த வீடியோ வெளியிடப்பட்டது.

மேலும், சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் தலைவரும் பெங்குடன் 30 நிமிட வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பின், பேசிய அவர்,  ‘பெங் பீஜிங்கில் உள்ள தனது இல்லத்தில் நலமுடன் இருப்பதாக’ கூறியுள்ளார்.


இந்நிலையில், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசாங்கம், சீன அரசு, டென்னிஸ் வீராங்கனை விஷயத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் வெஸ் லே டிரியண் தெரிவித்துள்ளதாவது, “நான் ஒன்றை மட்டும் தான் எதிர்பார்க்கிறேன், பெங் சூவாய் என்ன நடக்கிறது என்பதை பொதுவெளியில் பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்திருப்பதாவது, 

“உலகம் முழுவதும் பேச்சு சுதந்திரம், பாலின சமத்துவம் மற்றும் பாலியல் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தை மேம்படுத்துவதில் பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. 

உலக டென்னிஸ் அமைப்பின் தலைவர் ஸ்டீவ் சைமன் கடந்த வாரம் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 

“ பெங் சூவாயுடன் தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்தோம். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் ‘பெங் சூவாய் எங்கே’ எனும் ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தனை எதிர்ப்புகளுக்கும் கேள்விகளுக்கும் மத்தியில், சீன அரசின் சார்பில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த விஷயத்தில் சீனாவின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, 

“இந்த பிரச்சினையை அரசியலாக்குவது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால், சில நபர்கள் தீங்கிழைக்கும் வகையில்  வேண்டுமென்றே பெரிதுபடுத்துவதை நிறுத்த வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நிலைப்பாட்டின் மூலம், இந்த விவகாரம் முற்றுப்பெறுமா அல்லது தொடர்கதையாக தொடருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒமைக்ரான் பரவல்: 1.40 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் சீனா
ஒமைக்ரான் பரவல் அச்சுருத்தல் காரணமாக சுமார் 1.40 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீனா முடிவு செய்துள்ளது.
2. ‘ஏரியில் பாலம் கட்டும் இடம் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது’ - மத்திய அரசு தகவல்
ஏரியில் பாலம் கட்டும் இடம், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. 19 வது மாடியில் தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி
19 வது மாடியில் இருந்து தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார்.
4. பணக்கார நாடுகள் பட்டியல் - அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம்!
உலக பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
5. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டை அமெரிக்காவில் நடத்த திட்டம்..?
2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. முயற்சித்து வருகிறது.