கொழும்பு துறைமுக விரிவு ஒப்பந்தம் : சீன நிறுவனத்துக்கு வழங்கியது இலங்கை அரசு


கொழும்பு துறைமுக விரிவு  ஒப்பந்தம் : சீன நிறுவனத்துக்கு வழங்கியது இலங்கை அரசு
x
தினத்தந்தி 24 Nov 2021 4:14 PM GMT (Updated: 24 Nov 2021 4:14 PM GMT)

இலங்கையின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது

கொழும்பு , 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை விரிவு செய்வதற்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனம் பெற்றுள்ளது.ஆழ்கடல் கொள்கலன் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக இந்தியா மற்றும் ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்து சில மாதங்களே ஆன நிலையில் இலங்கை அரசு இந்த ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கையின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது .உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் சீனா இலங்கையை கடன் பிரச்சினைக்குள் இழுத்துவிடுவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கை அரசு 2017 ஆம் ஆண்டு  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு  கடனாக  சீன நிறுவனத்திடம் 99 வருட குத்தகைக்கு ஒப்படைத்தது.

இதை தொடர்ந்து தற்போது  கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக விரிவு  செய்வதற்கான ஒப்பந்தத்தை சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் பெற்றுள்ளதாக அமைச்சரவைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை குறிப்பிடாமல், சீன நிறுவனத்தை ஏல முறையில் தேர்வு செய்து, கப்பல் துறை அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபய  ராஜபக்சவின் நிர்வாகம் இந்த திட்டத்தை உறுதி செய்வதற்கு  முன்னர் இந்தியா மற்றும் ஜப்பானுடன் செய்துகொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை நிராகரித்து இருப்பதால் இலங்கை அரசியலில் இது அடுத்த சர்ச்சையாகியுள்ளது.


Next Story