48 மணி நேரத்தில் 18 பேரை தாக்கிய 'அணில்' கருணைக்கொலை..!


48 மணி நேரத்தில் 18 பேரை தாக்கிய அணில் கருணைக்கொலை..!
x
தினத்தந்தி 1 Jan 2022 10:28 PM GMT (Updated: 2022-01-02T04:02:01+05:30)

'ஸ்ட்ரைப்' என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த அணில் இதுவரை 18 பேரை தாக்கியுள்ளது.

லண்டன்,

பிரிட்டனில் அணில் ஒன்று மனிதர்களை தாக்கிய வினோத சம்பவம் நடந்துள்ளது. பிளின்ட்ஷயரில் உள்ள பக்லியில் ஒரு சாம்பல் அணில், இரண்டு நாட்களாக போக்கு காட்டி வந்த நிலையில் 18 நபர்களை கடித்துள்ளது.

உள்ளூர் மக்களால் 'ஸ்ட்ரைப்' என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த அணிலை பற்றி கொரின் ரெனால்ட்ஸ் என்பவர் கூறும்போது, "இந்த 'ஸ்ட்ரைப்' எனது தோட்டத்திற்கு தானியங்களை தின்றுவிட்டு செல்லும். முதலில் என்னை எந்த தொந்தரவும் செய்யவில்லை. ஒரு நாள் திடீரென அது என்னை கடித்தது. அதன் கடியால் எனக்கு ரத்தம் வந்தது". என்று கூறினார்.

மேலும் மற்றொருவர் கூறும்போது, 'ஸ்ட்ரைப்' என்னைக் கடித்ததுடன், என் நண்பனையும் தாக்கியது. மேலும் பலரைத் தாக்கியது. என் வீட்டை விட்டு வெளியே செல்ல பயமாக உள்ளது. தான் 'ஸ்ட்ரைப்' கடித்ததை சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளேன்". என்று அவர் தெரிவித்தார். இந்த அணிலானது அப்பகுதியில் மட்டும் 18 பேரை தாக்கியுள்ளது.

இறுதியில் இந்த அணில் கால்நடை மருத்துவரால் பிடிக்கப்பட்டது. இதனை காட்டுக்குள் விடுவது சட்டப்பட்டி குற்றம் என்பதால், கருணைக்கொலை செய்யப்பட்டது. 

பிரிட்டன் பூச்சிக் கட்டுப்பாட்டு சங்கத்தின் கூற்றுப்படி, சாம்பல் அணில்கள் ஒரு ஆக்ரோஷமான இனமாகும். இது 1870-களில் வட அமெரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதியில் அவை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் அழிவு மற்றும் மனிதர்களை கொடூரமாக தாக்கும் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசாங்கம் இதனை காடுகளுக்குள் விடுவதை தடை செய்தது.

Next Story