வடகொரியாவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த பரிசீலனை: ஆளும் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2022 11:09 PM GMT (Updated: 2022-01-21T04:39:04+05:30)

வட கொரியாவில் மீண்டும் அணு ஆயுத சோதனையையும், கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணை சோதனைகளையும் நடத்த பரிசீலிப்பது என்று ஆளும் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பியாங்யாங், 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு எதிராகவும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும், வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

இதனால் அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், அந்த நாட்டின் மீது பலத்த பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

ஒரு பக்கம் பொருளாதார தடை, மற்றொரு பக்கம் கொரோனாவால் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக வடகொரியா வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் அன்றாட உணவுக்கே தவிப்பதாக தகவல்கள் வெளியாகின.

4 முறை ஏவுகணை சோதனை

இந்த நிலையில் புத்தாண்டு பிறந்ததில் இருந்து 4 முறை அந்த நாடு ஏவுகணை சோதனைகளை நடத்தியது.

அதிலும் ஒலியை விட 5 மடங்கு வேகமாக பாய்ந்து செல்கிற ஹைபர் சோனிக் ரக ஏவுகணைகளை சோதித்தது, அண்டைநாடுகளின் அச்சுறுத்தலுக்கும், அமெரிக்காவின் ஆத்திரத்துக்கும் வழிவகுத்தது.

இந்த சோதனையைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்து, அந்த நாட்டின் மீதான தனது பிடியை மேலும் இறுக்கியது. அதோடு நில்லாமல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும், வடகொரியா மீது மீண்டும் பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

ஆளும் கட்சி கூட்டத்தில் முடிவு

இந்தநிலையில் வடகொரியாவின் பியாங்யாங் நகரில் ஆளும் தொழிலாளர் கட்சி அரசியல் விவகாரக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு நாட்டின் தலைவரான கிம் ஜாங் அன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வடகொரியா மீதான அமெரிக்காவின் விரோதப்போக்கை கடுமையாக சாடினார்கள்.

மேலும், அமெரிக்காவின் விரோதக்கொள்கை மற்றும் ராணுவ அச்சுறுத்தல் இனியும் கவனிக்க முடியாத அபாய கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறப்பட்டது. கூட்டத்தில் பேசியவர்கள், அமெரிக்காவுக்கு எதிராக நீண்ட கால மோதலுக்கு தயாராக இருப்பதாக சபதம் செய்தனர். மேலும் முன்னுரிமை அடிப்படையில் தங்கள் சொந்த முயற்சியில் தாங்கள் எடுத்த நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை (அணு ஆயுத சோதனையையும், கண்டம் விட்டு கண்டம்பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும்) ஒட்டுமொத்த அளவில் மறுபரிசீலனை செய்வதற்கும், மீண்டும் தொடங்குவதற்கான சிக்கலை உடனடியாக ஆய்வு செய்வதற்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மீது பாய்ச்சல்

இது தொடர்பாக வட கொரிய அரசின் அதிகாரபூர்வ ஊடகமான கே.சி.என்.ஏ. மேலும் கூறியதாவது:-

அரசியல் விவகாரக்குழு கூட்டம், வடகொரியாவுக்கு எதிராக நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிற அமெரிக்காவின் விரோதப்போக்கை திறம்பட கட்டுப்படுத்தக்கூடிய வலிமை வாய்ந்த உடல்வழிமுறைகளை உடனடியாக வலுப்படுத்தும் தேசிய பாதுகாப்புக்கான கொள்கைப்பணிகள் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக தற்போதைய அமெரிக்க நிர்வாகம், வடகொரியாவின் தற்காப்பு உரிமையை பறிக்கும் சூழ்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

வடகொரியா, அமெரிக்கா உச்சி மாநாட்டுக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அமெரிக்கா நூற்றுக்கணக்கான கூட்டுப்போர் ஒத்திகைகளை நடத்தியது. அதே சமயம் அதி நவீன ஆயுதங்களை தென் கொரியாவுக்கும், அணுசக்தி மூலோபாய ஆயுதங்களை கொரிய தீபகற்பத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அனுப்பியது. இது நமது நாட்டின் பாதுகாப்புக்கு தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வடகொரியா மீண்டும் அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதிப்பதற்கு பரிசீலிக்க முடிவு எடுத்து இருப்பது உலக அரங்கை உலுக்கி உள்ளது.


Next Story