சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவரை பயங்கரவாதியாக அறிவித்த ரஷியா


சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவரை பயங்கரவாதியாக அறிவித்த ரஷியா
x
தினத்தந்தி 27 Jan 2022 12:10 AM GMT (Updated: 27 Jan 2022 12:24 AM GMT)

ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாஸ்கோ, 

ரஷியாவில் அதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. 

கடந்த 2020-ம் ஆண்டு இவரை கொலை செய்யும் நோக்கில் விமான நிலையத்தில் அவர் குடித்த டீயில் நோவிசோக் என்று ரசாயன நஞ்சை கலந்து கொடுத்ததில் அவர் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்கு சென்றார். இந்த சதியின் பின்னணியில் அதிபர் புதினின் அரசு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக ஒன்று திரண்டன.

இதற்கிடையில் நவால்னிக்கு நஞ்சு கொடுக்கப்பட்ட பின்னணியில் ரஷிய அரசாங்கம் இருப்பதாக அமெரிக்க உளவு பிரிவு ஆய்வு செய்து முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மூத்த ரஷிய அரசு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதனிடையே ரசாயன தாக்குதலுக்கு ஆளான நவால்னி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ந் தேதி மீண்டும் ரஷியா திரும்பியபோது அவர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

பழைய பண மோசடி வழக்கில் அவரை கைது செய்ததாக ரஷிய போலீசார் கூறிய நிலையில் இந்த வழக்கில் அவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, தற்போது நவால்னி மாஸ்கோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியை ரஷியா பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. நவால்னியின் ஆதரவாளர்கள் பலரும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஷிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story