இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தகம் 2030ம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலர் ஆக உயரும் - மந்திரி பியூஷ் கோயல்


இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தகம் 2030ம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலர் ஆக உயரும் - மந்திரி பியூஷ் கோயல்
x
தினத்தந்தி 6 April 2022 12:56 PM GMT (Updated: 6 April 2022 1:00 PM GMT)

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தத்தால், 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 5000 கோடி டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்போர்ன்,

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் மூன்று நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். 

ஏப்ரல் 2 அன்று, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இதன் கீழ் இரு நாடுகளும் ஏராளமான பொருட்களுக்கு வரியில்லா அணுகலை வழங்குகின்றன. மேலும், இரு நாடுகளும் சேவைகளில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான விதிமுறைகளை தளர்த்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், இன்று மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அந்நாட்டு வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைகளின் மந்திரி டான் டெஹானோ உடன் இருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இரு நாடுகளின் வர்த்தக சமூகத்தினரிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய தொழிலதிபர்களை அழைக்கிறேன்.

வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்  இரு ஜனநாயக நாடுகள், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் விளையாட்டுகளை விரும்பும் காமன்வெல்த் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நிரப்பு கூறுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் பரந்த சந்தை மற்றும் ஆஸ்திரேலியாவின் முதலீட்டு திறன் இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (இண்ட்-ஆஸ் ஈ சி டி ஏ),  இந்தியாவில் சுமார் 140 கோடி வாடிக்கையாளர்களுடன் ஆஸ்திரேலிய தொழில்களுக்கு ஒரு பரந்த சந்தையை திறக்கும்.

இருதரப்பு வர்த்தகம் தற்போதைய 2600-2700 கோடி டாலர்களில் இருந்து 2030-க்குள் 10,000 கோடி டாலர் ஆக உயரும்.

ஐந்து ஆண்டுகளில் இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு வர்த்தகம் 5000 கோடி டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இரு நாடுகளும் ஜவுளி, மருத்துவம், சுற்றுலா, ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஐடி, ஸ்டார்ட்அப்கள் மற்றும் கணக்கியல் துறைகளில் இந்த ஒப்பந்தம் பெரிய வேலைகளை உருவாக்கும்.சேவைத் துறையில் மிகப்பெரிய வணிக வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலான இந்தியர்களுக்கு உயர்கல்விக்கு ஆஸ்திரேலியா பிடித்தமான இடமாக இருந்தாலும், அதில் சில தடைகள் இருந்தன. இந்த ஒப்பந்தம் ஒரு பெரிய தடையை தீர்க்க வழி வகுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் ஐடி துறையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த ஒரு பெரிய தடையை தீர்க்க வழி வகுத்துள்ளது”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து மந்திரி பியூஷ் கோயல் மெல்போர்னில் ஆஸ்திரேலிய இந்திய வர்த்தக சம்மேளனம்  ஏற்பாடு செய்திருந்த வணிகத் தலைவர்களுடன் மதிய உணவு நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றினார். 

அங்கு அவர் கூறியதாவது,“பலதரப்பு பொருளாதார மதிப்பு நெட்வொர்க்குகளின் விரிவான வளர்ச்சிக்கு பங்களிப்பதில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது. இந்த ஒப்பந்தம் இரு பொருளாதாரங்களிலும் நிதி ரீதியாக பல விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.

Next Story