உலக செய்திகள்

கலவரத்தை கட்டுப்படுத்த இலங்கையில் ராணுவம் தீவிர ரோந்து + "||" + Army intensifies patrols in Sri Lanka to control riots

கலவரத்தை கட்டுப்படுத்த இலங்கையில் ராணுவம் தீவிர ரோந்து

கலவரத்தை கட்டுப்படுத்த இலங்கையில் ராணுவம் தீவிர ரோந்து
இலங்கையில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி வருவதுடன், அந்த நாட்டு அரசியலையும் புரட்டிப்போட்டு உள்ளது.

வன்முறை சம்பவங்கள்

பொருளாதார நெருக்கடியை முன்வைத்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அமைதியான போராட்டத்தில் கடந்த 9-ந் தேதி வன்முறை வெடித்தது.


பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதால் விரக்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், கொழும்புவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாய்ந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதால், நாடு இதுவரை கண்டிராத வன்முறை சம்பவங்களை எதிர்கொண்டது.

9 பேர் பலி

இலங்கை முழுவதும் பரவிய இந்த வன்முறை சம்பவங்கள் 2-வது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது. முன்னாள் மற்றும் இந்நாள் மந்திரிகள் உள்பட ராஜபக்சே ஆதரவாளர்கள் சுமார் 58 பேரின் வீடுகள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதலும், தீ வைப்பும் அரங்கேறின.

ராஜபக்சே ஆதரவாளர்கள், அரசு எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டதுடன், 250-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் எம்.பி. மற்றும் போலீசாரும் அடங்கியது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கொழும்பு உள்பட பல பகுதிகளில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால், கலவரக்காரர்களை கண்டதும் சுட முப்படையினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.

இதன் மூலம் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் குறையத்தொடங்கின.

அரசு அமைக்க பேச்சுவார்த்தை

மறுபுறம் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை அதிபர் கோத்தபய ராஜபக்சே முடுக்கி விட்டுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றும் நீடித்தது.

அதன்படி ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறி சுயேச்சையாக இயங்கி வரும் எம்.பி.க்கள் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா (எஸ்.ஜே.பி.) கட்சியினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இடைக்கால அரசின் பிரதமர் பதவியை ஏற்குமாறு எஸ்.ஜே.பி. தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய அழைப்பு விடுத்திருந்த நிலையில், இதை அவர் மீண்டும் நிராகரித்து உள்ளார்.

உள்நாடு மற்றும் சர்வதேச ஆதரவை இழந்து விட்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறியுள்ள அந்த கட்சி செய்தி தொடர்பாளர் லட்சுமண் கிரியெல்லா, அவர் பதவியில் இருந்தால் பிரதமர் பதவியை சஜித் பிரேமதாசா ஏற்கமாட்டார் என்றும் கூறினார்.

இழுபறி நீடிப்பு

இதைப்போல கோத்தபய ராஜபக்சே விலகினால் மட்டுமே இடைக்கால அரசில் இணைவோம் என மார்க்சிஸ்ட் ஜே.வி.பி. கட்சியும் அறிவித்து உள்ளது. அவர் பதவி விலகவில்லை என்றால் இடைக்கால அரசுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவித்து உள்ளது.

இதனால் இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

எனினும் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக சஜித் பிரேமதாசா மற்றும் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோருடன் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ராஜபக்சே மகனின் ஓட்டல்கள்

இதற்கிடையே மேலும் சில அரசியல் தலைவர்களின் சொத்துகளை நேற்று முன்தினம் இரவிலும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். குறிப்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷிதாவுக்கு சொந்தமான 2 ஓட்டல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

மேலும் முன்னாள் மந்திரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலங்கமா வீடு, லக்கலாவில் உள்ள பண்ணை போன்றவை தீக்கிரையாக்கப்பட்டன. இதைப்போல எம்.பி.க்கள் சுமித், பிரேம்நாத், மகீபலா ஹெராத், முன்னாள் மந்திரி ஹபீஸ் நசீர் அகமது உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன.

இந்த சம்பவத்தின் போது எம்.பி.க்கள் சிலரின் வீடுகளில் மூட்டை மூட்டையாக பதுக்கப்பட்ட நெல், உரங்கள் கைப்பற்றப்பட்டன.

பல இடங்களில் போலீசாரின் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களுக்கும் தீ வைக்கப்பட்டன.

ராணுவம் குவிப்பு

அதேநேரம் நேற்று குறிப்பிடத்தக்க வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. இதனால் நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை விலக்கிக்கொள்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ராணுவம் முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக தலைநகர் கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் அதிக அளவில் வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

முக்கிய வீதிகளில் ராணுவ வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினரும் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் களமிறக்கப்பட்டு ரோந்து பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

வன்முறைகளை கைவிடுமாறும், அமைதி காக்குமாறும் போராட்டக்காரர்களுக்கு ராணுவ செயலாளர் கமல் குணரத்னே அறிவுறுத்தி உள்ளார்.

கடற்படை தளத்தில் மகிந்த ராஜபக்சே

இதற்கிடையே மகிந்த ராஜபக்சேவை பத்திரமாக திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்துக்கு பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர். தற்போது அவர் குடும்பத்தினருடன் அங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த தகவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னே, முன்னாள் பிரதமருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார். இலங்கையில் இயல்பு நிலை திரும்பியதும் ராஜபக்சே விரும்பும் இடத்துக்கு பத்திரமாக அழைத்து செல்லப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே மகிந்த ராஜபக்சே திரிகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும் தகவல் அறிந்ததும் ஏராளமான போராட்டக்காரர்கள் கடற்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐ.நா. கண்டனம்

இந்த நிலையில், இலங்கை வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. மனித உரிமை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த வன்முறை தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என அந்த அமைப்பின தலைவர் மிச்செல் பாச்லெட் அறிவுறுத்தி உள்ளார்.

இதைப்போல மனித உரிமைகள் கண்காணிப்பகமும், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெசும் இலங்கை வன்முறை சம்பவங்களுக்கு கண்டனங்களையும், கவலையையும் வெளியிட்டு இருக்கின்றனர்.

தமிழக கடலோர பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வரத்தொடங்கினர். இதனால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

தற்போது இலங்கையில் வன்முறை நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி, அங்கு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த கொலை குற்றவாளிகள், கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டவர்கள் சுமார் 50 பேர் ஜெயிலில் இருந்து தப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள், அகதிகள் போன்று தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. உத்தரவின் பேரில் தமிழக கடற்கரை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தீவிர சோதனை

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசார் மாவட்டம் முழுவதும் கடற்கரையோரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மீனவ கிராமங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வந்து உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து கடலில் படகில் சென்றும் கண்காணித்து வருகின்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான் தீவு, நல்லதண்ணி தீவு, காசுவாரி தீவு உள்ளிட்ட தீவுப்பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று தூத்துக்குடி கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்

இது போல ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக உச்சிப்புளி பருந்து கடற்படை விமானதளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் இரவு-பகலாக தனுஷ்கோடி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் வரையிலான கடல் பகுதியில் தாழ்வாக பறந்தபடி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இது தவிர சென்னையில் உள்ள இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான 2 அதிநவீன போர் கப்பல்களும் மற்றும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு சொந்தமான 3 ஹோவர் கிராப்ட் கப்பல்களும் இந்திய கடல் எல்லைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் நீடிக்கும் பதற்றம்: நாடு முழுவதும் ராணுவம் சிறப்பு பாதுகாப்பு
அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது.
2. பொதுமக்களை சுட்டுத்தள்ள ராணுவம் தயாராக உள்ளதா? இலங்கை ராணுவ தளபதி விளக்கம்
இலங்கையில் உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், காவல்துறை மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
3. இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக வந்தனர்
இலங்கையில் இருந்து 18 அகதிகள் ராமேசுவரம் வந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
4. இலங்கையில் இருந்து படகில் தப்பி 2 குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்த பெண்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து படகில் 2 குழந்தைகளுடன் தப்பி இளம்பெண் தனுஷ்கோடி வந்தார். வாழ வழியின்றி தவிக்கும் எனக்கு உதவுங்கள் என உருக்கமுடன் அவர் கோரிக்கை விடுத்தார்.
5. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்படாது: இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.