இலங்கையில் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணும் முயற்சிக்கு ஆதரவு: சீனா


இலங்கையில் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணும் முயற்சிக்கு ஆதரவு: சீனா
x
தினத்தந்தி 13 May 2022 7:57 PM GMT (Updated: 13 May 2022 7:57 PM GMT)

அரசியல் குழப்பத்துக்கு தீர்வு கண்டு, நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான இலங்கை அரசின் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறினார்.

இலங்கையில் சீனா அதிகமான முதலீடுகளை செய்வதற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவளித்தார். இதனால் அவருடன் சீன அரசு மிகுந்த நட்பு பாராட்டியது. இதனால் சமீபத்தில் அவர் பதவி விலகியபோது எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தது.

இதைப்போல ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பதையும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே அணுகி வருகிறது.

ரணில் பிரதமராகி இருப்பது குறித்த கேள்விக்கு சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் பதிலளிக்கையில், ‘பாரம்பரியமான நட்பு நாடு என்ற வகையில், இலங்கையின் சமீபத்திய நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அரசியல் குழப்பத்துக்கு தீர்வு கண்டு, நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான இலங்கை அரசின் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்’ என்று மட்டும் கூறினார்.

சீனாவுக்கு இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாடு பலமுறை தெளிவாக கூறப்பட்டிருப்பதாக தெரிவித்த லிஜியான், இலங்கையில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க உதவுவோம் என்றும் தெரிவித்தார்.


Next Story