விமானத்தில் வாக்குவாதம்; குடிபோதையில் ஊழியரின் கையை கடித்த பயணி


விமானத்தில் வாக்குவாதம்; குடிபோதையில் ஊழியரின் கையை கடித்த பயணி
x
தினத்தந்தி 18 Jan 2024 6:35 AM GMT (Updated: 18 Jan 2024 8:14 AM GMT)

போலீசாரின் விசாரணையில் விமானத்தில் நடந்த சம்பவம் எதுவும் தனக்கு நினைவில்லை என அவர் கூறியுள்ளார்.

டோக்கியோ,

ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து அமெரிக்காவின் சியாட்டில் நோக்கி, ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. 159 பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானத்தில் இருந்த 55 வயது பயணி ஒருவர் திடீரென எழுந்து விமான பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதன்பின்னர் அவரை தாக்கியதுடன், பணியாளரின் கையில் கடித்து விட்டார். இதில், பணியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விமானத்தில் பயணிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை முன்னிட்டு அந்த விமானம், ஜப்பானின் டோக்கியோ நகருக்கு திருப்பி விடப்பட்டது.

அந்த விமானம் ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதன்பின் போலீசாரிடம் அந்நபர் ஒப்படைக்கப்பட்டார். இதனால் விமானத்தில் சிறிது நேரம் பயணிகள் இடையே பரபரப்பு காணப்பட்டது. அவரை அழைத்து சென்ற போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

ஆனால், நடந்த சம்பவம் எதுவும் தனக்கு நினைவில்லை என போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். இதற்கு சமூக ஊடக பயனாளர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

விமானத்தின் உள்ளே நடந்த இந்த தாக்குதலை, ஜாம்பி படத்தின் துவக்கம் போன்று உள்ளது என சிலர் சுட்டி காட்டியுள்ளனர். அந்த பயணி குடிபோதையில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

ஜப்பானில் விமான போக்குவரத்தின்போது இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கும் வகையில் செல்வது, விமானி அறையில் ஏற்படும் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன.


Next Story