இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் கலிபோர்னியா கவர்னர் சந்திப்பு


இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் கலிபோர்னியா கவர்னர் சந்திப்பு
x

அமெரிக்காவில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணாவை கலிபோர்னியா கவர்னர் சந்தித்து பேசியுள்ளார்.



வாஷிங்டன்,



அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக (பொறுப்பு) எலெனி கவுனாலாகிஸ் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகரில், இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணாவை அவரது இல்லத்தில் இன்று எலெனி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது கவர்னர் எலெனிக்கு, மகாத்மா காந்திஜியின் சுயசரிதம் அடங்கிய புத்தகம் ஒன்றை நீதிபதி ரமணா பரிசாக வழங்கினார். இதற்கு முன்பு, சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய அமெரிக்கர்கள் கூட்டமைப்பு நடத்திய கவுரவிப்பு நிகழ்ச்சியில் நீதிபதி ரமணா கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் பன்முக தன்மை கொண்டவை. உலகில் உள்ள ஒவ்வொருவரும் அதற்கு மதிப்பளிக்கவும், மகிழவும் வேண்டும். அமெரிக்கா, பன்முக தன்மையை கவுரவித்து, அதற்கு மதிப்பளித்து வருகிறது.

அதனாலேயே, நீங்கள் எல்லோரும் இந்த நாட்டுக்கு வந்தடைந்து, உங்களது கடின உழைப்பு மற்றும் அசாத்திய திறமைகளால் சாதனை படைக்க முடிகிறது என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோர் நவீன அமெரிக்காவை உருவாக்கியதில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றும் நீதிபதி ரமணா கூறியுள்ளார். உங்களது அடையாளங்களை நீங்கள் மாற்றியதுடன் இல்லாமல், நாட்டின் முகமும் மாற்றப்பட்டு உள்ளது. கடின உழைப்பு, அதிக ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றாலேயே இந்த பயணம் சாத்தியப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


Next Story