ரஷிய - உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் - டிரம்ப்


ரஷிய - உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் - டிரம்ப்
x

அமெரிக்க அதிபராக என்னை மீண்டும் தேர்வு செய்தால், ரஷியா-உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவேன் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் ஓர் ஆண்டாக ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது.

ரஷிய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற தீவிரம்காட்டி வரும் நிலையில் அங்கு இருநாட்டு ராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதனிடையே ரஷியாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும், அதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தப்போரால், சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக திரண்டன. ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும்படியும், பேச்சு நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படியும், பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அதிபர் தேர்தலில் நான் வேட்பாளராக போட்டியிட உள்ளேன். அதிபராக நான் மீண்டும்தேர்வு செய்யப்பட்டால், முதற்கட்டாமாக ரஷ்ய அதிபர் புடினையும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் நேரில் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தி 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story