தென்கொரியாவில் அலுவலக கட்டிடத்தில் தீ - 7 பேர் பலி


தென்கொரியாவில் அலுவலக கட்டிடத்தில் தீ - 7 பேர் பலி
x

தென்கொரியாவில் அலுவலக கட்டிடத்தில் தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

சியோல்,

தென்கொரியாவில் டேகு நகரில் மாவட்ட கோர்ட்டு அருகே 7 மாடிகளைக்கொண்ட அலுவலக கட்டிடம் ஒன்று உள்ளது. இதன் 2-வது தளத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 10.55 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவத்தொடங்கியது. அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் அலறினர், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் தீயணைக்கப்பட்டது.

இதில் 7 பேர் உடல் கருகியும், மூச்சு திணறியும் உயிரிழந்தனர். 41 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 26 பேர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

இந்த தீ பற்றி டேகு மாநகர போலீஸ் அதிகாரி ஜியோங் கியோன் வூக் கூறுகையில், "பாதுகாப்பு கேமரா காட்சி பதிவுகளில், சந்தேக நபர் ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும்போது தீ மூட்டுதவதற்கு பயன்படுத்தப்படும் கன்டெய்னரை பிடித்துக்கொண்டு வெளியேறுவது தெரிய வந்துள்ளது. தீயில் சிக்கி பலியான 7 பேரும் ஒரே அறையில் இருந்தவர்கள் ஆவார்கள். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது" என தெரிவித்தார். இந்த சம்பவம், டேகு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த டேகு நகரில் சுரங்கப்பாதை ரெயிலில் 2003-ம் ஆண்டு நடந்த மிக மோசமான தீவைப்பு சம்பவத்தில் 192 பேர் கொல்லப்பட்டது, அந்த நாட்டின் வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக பதிவாகி உள்ளது.


Next Story