இங்கிலாந்தில் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு - பொதுமக்கள் போராட்டம்


இங்கிலாந்தில் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு - பொதுமக்கள் போராட்டம்
x

எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இங்கிலாந்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டன்,

ரஷியா மீது சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷியாவிடம் எரிவாயு இறக்குமதியை நம்பி இருந்த நாடுகள் பெரிதும் பாதிக்கப்ப்பட்டுள்ளன.

அந்த வகையில் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. எரியாற்றல் செலவினம் கடந்த ஆண்டு இருந்ததை விட இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படாததால், அந்நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புகள் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டன் நகரில் உள்ள கிங்ஸ் சதுக்கத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், 'விலை உயர்வை கட்டுப்படுத்துங்கள், மக்களை அல்ல' என முழக்கமிட்டனர்.

மேலும் பிரச்சினைகளை போக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். எரிசக்தி விலை உயர்வை சமாளிப்பதற்கான திட்டங்களை இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் அறிவித்துள்ள நிலையில், தற்போதைய சூழலுக்கு அது போதுமானதாக இருக்காது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story