கருங்கடல் துறைமுகத்தில் தேங்கிய தானிய விவகாரம்: ரஷியா, உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்


கருங்கடல் துறைமுகத்தில் தேங்கிய தானிய விவகாரம்:  ரஷியா, உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்
x

கருங்கடலில் தேங்கியுள்ள தானியங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கான ரஷியா, உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.



இஸ்தான்புல்,



ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போரானது நீண்டு கொண்டே செல்கிறது. இதன் ஒரு பகுதியாக ரஷியா மீது பல நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. ரஷியாவும் அசராமல் போரை நீட்டித்து வருகிறது.

உக்ரைனின் விளைபொருட்களை துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு விடாமல் அந்த பகுதிகளை ரஷியா முடக்கியது. இது உணவு பஞ்சத்தில் நாடுகளை தள்ளி விடும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, தானிய விவகாரம் பற்றி ராணுவ அதிகாரிகள் வழியே தீர்வு ஏற்படுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தேவைப்படும்போது அது பற்றிய தகவல் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

ரஷிய ஊடக தகவலின்படி, துருக்கி, ரஷியா, உக்ரைன் மற்றும் ஐ.நா. அமைப்புகள் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இன்று பேச்சுவார்த்தை நடத்துவது என திட்டமிடப்பட்டு இருந்தன.

கடந்த மார்ச் மாதம் துருக்கியில் நடந்த மற்றொரு கூட்டத்திற்கு பின்னர் முதன்முறையாக ரஷியா மற்றும் உக்ரைன் அரசாங்கங்கள் சந்தித்து நேரடியாக நடத்தும் பேச்சுவார்த்தையாக இது உள்ளது.

கருங்கடல் துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தீர்வு ஏற்படுவதற்காக மேற்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷியா திறந்தமனதுடன் உள்ளது என முன்பே ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் கூறினார்.

உக்ரைனில் தேங்கிய பொருட்களால் ஏற்றுமதியாகாமல் அவை மக்கி போக கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடந்த ஜி20 கூட்டத்தின் முடிவில், எந்தவித கூட்டு அறிக்கையோ மற்றும் எட்டப்பட்ட எந்தவித ஒப்பந்தங்கள் பற்றியோ அறிவிப்புகளோ வெளியிடப்படவில்லை.


Next Story