ஜெர்மனியில் எரிவாயு பற்றாக்குறை சூழலை எதிர்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தல்


ஜெர்மனியில் எரிவாயு பற்றாக்குறை சூழலை எதிர்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தல்
x

ரஷியாவால் இயற்கை எரிவாயு வினியோகம் திடீரென நிறுத்தப்பட கூடிய சூழலால், ஜெர்மனியில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.



பெர்லின்,



உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்ட போரால் பல நாடுகளின் பொருளாதார தடைகளை ரஷியா சந்தித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவும் பதிலடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ரஷியாவின் ஜெர்மனிக்கான எரிவாயு வினியோகம் குறைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய நெட்வொர்க் கழகத்தின் தலைவர் கிளாஸ் முல்லர் கூறும்போது, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் உரிமையாளர்கள் எரிவாயு பாய்லர்கள் உள்ளிட்டவற்றை முறையாக பரிசோதனை செய்து கொள்ளவும், அவை அதிக அளவில் திறம்பட செயலாற்றும் வகையில் சரி செய்து கொள்ளவும் வலியுறுத்தி உள்ளார்.

முறையான பராமரிப்பு, 10% முதல் 15% வரையிலான எரிவாயு நுகர்வை குறைக்கும் என அவர் கூறியுள்ளார். குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னான 12 வாரங்களை குடியிருப்புவாசிகளும் மற்றும் வீட்டு உரிமையாளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினரும், தங்களது வீட்டு அறையின் வெப்பநிலை வழக்கம்போல் வைத்திருக்க வேண்டும். சில அறைகள் சற்று குளிராக வைத்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் சுலோவேக்கியா ஆகிய நாடுகளுக்கான எரிவாயு வினியோகத்தினை ரஷியா குறைத்து கொண்டுள்ள சூழலில், ஜெர்மனி நாட்டு மக்களிடம் அந்நாட்டு அரசு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

ரஷியாவில் இருந்து ஜெர்மனிக்கு, பால்டிக் கடலின் அடியில் இருந்து செல்ல கூடிய குழாய் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது என ரஷிய அரசின் கேஜ்பிராம் என்ற ஆற்றல் நிறுவனம் கூறியிருந்தது. இதனால் எரிவாயு வினியோகம் பாதிக்கப்பட்டது. குறைவான எரிவாயுவே அனுப்பப்படுகிறது.

இதனை சரி செய்வதற்கான உபகரணங்கள் கனடாவில் இருந்து வரவேண்டியுள்ளது. ஆனால், உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்ட படையெடுப்பினால், மேற்கத்திய நாடுகள் விதித்த தடையால் அவை வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

எனினும், இந்த விளக்கத்தினை புறந்தள்ளியுள்ள ஜெர்மனி நாட்டு தலைவர்கள் அரசியல் ரீதியிலான முடிவு என இதனை சாடியுள்ளனர். ரஷியாவிடம் இருந்து நீண்ட காலத்திற்கு எரிவாயு குறைவாக அனுப்பப்பட்டால், நாங்கள் சேமிப்பு பற்றி தீவிரமுடன் பேச வேண்டியிருக்கும் என்றும் முல்லர் கூறியுள்ளார்.

குளிர்காலத்தில், ஜெர்மனிக்கு எரிவாயு வினியோகம் இல்லை என்றால் அந்த காட்சியை காண முடியாது என்றும் அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார். இதனால், சில நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதிக்கவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.


Next Story