ஈரானில் போலீஸ் தாக்குதலில் இளம்பெண் மரணம்: ஹிஜாப்பை எரித்து, தலைமுடியை வெட்டி பெண்கள் நூதன போராட்டம்!


ஈரானில் போலீஸ் தாக்குதலில் இளம்பெண் மரணம்: ஹிஜாப்பை எரித்து, தலைமுடியை வெட்டி பெண்கள் நூதன போராட்டம்!
x

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

டெஹ்ரான்,

ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்தது.எனினும், இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க நடிகையும் நாவலாசிரியருமான லியா ரெமினியின் டுவீட் காரணமாக, ஹிஜாப் அணியாத ஈரானியப் பெண்களுக்கு எதிரான வழக்கு மற்றும் அரசு நிர்வாகத்தின் வன்முறை ஆகியவை உலகின் கவனத்தைப் பெற்றன.

அதன்பின், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பெண்கள் போராட்டம் தொடர்பாக ஈரானிய பத்திரிகையாளரும் ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட் டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஹிஜாப் போலீசாரால் மஹ்சா அமினி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஈரானிய பெண்கள் தலைமுடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

7 வயதில் இருந்து பெண்கள் நாங்கள் எங்கள் முடியை மறைக்கவில்லை என்றால் பள்ளிக்கு செல்ல முடியாது, வேலையும் கிடைக்காது. இந்த பாலின வெறி ஆட்சியால் நாங்கள் சோர்வடைகிறோம்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீது ஈரானின் சக்சேஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.பல போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர்.

முதலில் போலீசார் 22 வயது பெண்ணை கொன்றனர், இப்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


Next Story