லெபனானில் இருந்து ஏவிய 6 ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்


லெபனானில் இருந்து ஏவிய 6 ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்
x

தெற்கு லெபனான் பகுதியில், வெள்ளை பாஸ்பரஸ் வெடிகுண்டுகளை பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது என அறிக்கைகள் வெளிவந்தன.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கிலான குடிமக்கள் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன. மக்கள் லட்சக்கணக்கில் புலம் பெயர்ந்து உள்ளனர்.

இந்த போரில் 17,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேலில் 1,147 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. தன்னுடைய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என கூறியது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் ஆதரவு தெரிவிக்கின்றது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், லெபனானில் இருந்து கொண்டு இஸ்ரேல் நாட்டின் மீது பயங்கரவாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்படி, இஸ்ரேல் எல்லையை நோக்கி லெபனானில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. இதன்பின்னர், எந்த பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதோ அதனை இலக்காக கொண்டு படையினர் பெரிய ரக துப்பாக்கிகளை கொண்டு பதிலடி தாக்குதல் தொடுத்தனர்.

கடந்த அக்டோபரில் தெற்கு லெபனான் பகுதியில், அமெரிக்கா விநியோகித்த வெள்ளை பாஸ்பரஸ் வெடிகுண்டுகளை பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது என அறிக்கைகள் வெளிவந்தன.

இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயல்திட்ட தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பை, அந்த அறிக்கைகளை பற்றி நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.

அதுபற்றிய கூடுதல் விவரங்களை பெறுவதற்காக விசாரணை மேற்கொள்வோம். நேர்மையான நோக்கங்களுக்காகவும் மற்றும் ஆயுத மோதலை எதிர்கொள்வதற்காகவும் பயன்படுத்தப்படும் என்ற முழு எதிர்பார்ப்புகளுடன் வெள்ளை பாஸ்பரஸ் போன்ற பொருட்களை அமெரிக்கா வழங்கியது என வலியுறுத்தி கூறியுள்ளார்.


Next Story