தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்


தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2024 11:40 PM GMT (Updated: 2 April 2024 7:12 AM GMT)

இஸ்ரேலில் தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

ஜெருசலேம்,

காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் இஸ்ரேலில் இருந்து 250-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக அவர்கள் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசா மீது போர் தொடுத்தது.

இந்த போர் சுமார் 6 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசா தரப்பில் இதுவரை 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எனவே போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன.

இந்தநிலையில் 2026-ல் நடைபெற வேண்டிய பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும், காசாவில் உள்ள பணய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் மற்றும் பணய கைதிகள் விடுவிக்கப்படும்வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இஸ்ரேல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பின்னர் நாடாளுமன்றத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

எனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறுகையில், `முன்கூட்டியே தேர்தல் நடத்துவது நாட்டையே முடக்கி பணய கைதிகளை விடுவிப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே பொதுமக்கள் இந்த போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


Next Story