இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு


இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 30 Nov 2023 5:49 AM GMT (Updated: 30 Nov 2023 8:06 AM GMT)

போர் நிறுத்தத்தை நீட்டிக்க கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்தின.

காசா,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்ட நிலையில், சுமார் 250 பேர் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டு காசாவுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் காசாவில் மட்டும் 14 ஆயிரத்து 500-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயின. சுமார் 50 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சூழலில்தான் இஸ்ரேல் தனது பிடிவாதத்தை கைவிட்டு தற்காலிக போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தது. அதை தொடர்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 24-ந்தேதி காசாவில் 4 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த காலத்தில் ஹமாஸ் வசம் உள்ள 50 பணய கைதிகளை விடுவிக்கவும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யவும் இருதரப்பும் உறுதியளித்தன.

அதன்படி போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து ஹமாஸ் ஒவ்வொரு குழுவாக பணய கைதிகளை விடுவித்தது. அதே போல் ஒரு பணய கைதிக்கு 3 சிறை கைதிகள் என்ற வகையில் பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. அந்த வகையில் போர் நிறுத்தம் நடந்த 4 நாட்களில் ஹமாஸ் 51 பணய கைதிகளையும், இஸ்ரேல் 153 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்திருந்தது.

இந்த சூழலில் காசா மக்களுக்கு பெரும் நிம்மதி அளித்த 4 நாள் போர் நிறுத்தம் கடந்த 27-ந்தேதி முடிவுக்கு வந்தது. அதே சமயம் போர் நிறுத்தத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க இஸ்ரேல்-ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன.

அதன்படி நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம் நேற்று முன்தினம் காலை அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணங்க நேற்று முன்தினம் 9 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி என 10 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இது தவிர மற்றொரு உடன்படிக்கையின்படி தாய்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேரும் காசாவில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனிடையே 10 பணய கைதிகளுக்கு ஈடாக 30 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்றும் பணய கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதில் இருதரப்பும் மும்முரம் காட்டின. அதன்படி விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர் பட்டியலை இருதரப்பும் பரிமாறிக்கொண்டன. 6-வது கட்டமாக ஹமாஸ் 10 பணய கைதிகளையும், இஸ்ரேல் 30 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்தன.

இந்த நிலையில் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால், போர் நிறுத்தத்தை நீட்டிக்க கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மேலும் ஒரு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தார் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Next Story