மெக்சிகோ எல்லைக்கு 1,500 படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு


மெக்சிகோ எல்லைக்கு 1,500 படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு
x

மெக்சிகோ நாட்டு எல்லைக்கு 1,500 படை வீரர்களை அனுப்ப அமெரிக்க அதிபர் பைடன் முடிவு செய்து உள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஜோ பைடன், மெக்சிகோ நாட்டு எல்லைக்கு தனது நாட்டின் 1,500 படை வீரர்களை அனுப்ப முடிவு செய்து உள்ளார். அவர்கள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லை பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய உதவிடுவார்கள்.

இதுபற்றி பென்டகன் செய்தி தொடர்பாளர் பேட் ரைடர் கூறும்போது, அமெரிக்காவின் 1,500 படை வீரர்கள் 90 நாட்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த, தரை சார்ந்த கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு, தரவுகளை பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.

கைது உள்ளிட்ட சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் ராணுவ வீரர்கள் நேரடியாக பங்கெடுக்கமாட்டார்கள் என தெரிவித்து உள்ளார்.

அமெரிக்கா நாட்டுக்குள் மெக்சிகோ எல்லை வழியே அகதிகளாக புலம் பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெக்சிகோ நாட்டினர் அல்லாத நபர்களை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்க வீரர்கள் செய்து வருகின்றனர்.

இதற்காக, இதற்கு முன் அதிபராக இருந்த டிரம்ப் காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக அனுப்பி வைக்கப்பட்ட 2,500 தேசிய பாதுகாவல் படையினருடன் இணைந்து இந்த பணியை தற்போது செல்ல இருக்கிற வீரர்கள் மேற்கொள்வார்கள்.

2-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பைடன் வெளியிட்ட நிலையில், அவரது பதவி காலத்தில் சட்டவிரோத வகையில் எல்லை வழியேயான ஊடுருவலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

எண்ணற்ற புலம்பெயர் அகதிகள் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் தஞ்சம் அடைந்தனர் என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த நிலையில், வருகிற 11-ந்தேதியுடன் அமெரிக்காவில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் தினசரி 10 ஆயிரம் பேர் எல்லை வழியே கடந்து உள்ளே நுழைய கூடும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story