'கொரோனா ஊரடங்கை தளர்த்துக' - அரசுக்கு எதிராக சீனாவில் மக்கள் போராட்டம்


கொரோனா ஊரடங்கை தளர்த்துக - அரசுக்கு எதிராக சீனாவில் மக்கள் போராட்டம்
x

சீனாவில் கொரோனா ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

பீஜிங்,

உலகம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் சீனாவில் கொரோனா வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.

அந்த வகையில் ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழு மற்றும் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே, ஊரடங்கு அமலில் உள்ள ஜிங்ஜங்க் மாகாணத்தில் உரும்யூ நகரில் கடந்த 24-ம் தேதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில், அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உரும்யூ நகரில் நேற்று முன் தினம் இரவு திரண்ட மக்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், சீன அதிபர் ஜி ஜீன்பிங்கிற்கு எதிராகவும் மக்கள் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர். ஆனாலும், போராட்டம் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.


Related Tags :
Next Story