29. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி


29. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி
x
தினத்தந்தி 12 Jan 2017 11:33 PM GMT (Updated: 12 Jan 2017 11:33 PM GMT)

சிற்றஞ் சிறுகாலை வந்து உன்னை சேவித்துஉன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய் பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ

திருப்பாவை

சிற்றஞ் சிறுகாலை வந்து உன்னை சேவித்துஉன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.


கோவிந்தா! மார்கழி மாத அதிகாலை நேரத்தில் நீ இருக்குமிடத்தில் வந்து உன்னை வணங்கி உன் பொற்றாமரை அடிகளைப் போற்றுவ தன் பொருளைக் கேட்பாயாக! பசுக் களை மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ எங்களை அடைக்கலமாய் ஏற்றுக் கொள்ளாமல் விட்டுவிடுவது உன் தகுதிக்குத் தகாதது. இன்று நாங்கள் உன் அருளை பெற்றுக் கொள்ள மட்டும் வரவில்லை. எப்போதும் இனிவரும் ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் உனக்கு உறவுடையவர்களாக, அடிமை செய்பவர்களாக இருக்கவே விரும்புகிறோம். இதைத் தவிர மற்ற விருப்பங்களை எங்கள் மனதிலிருந்து அகற்றிவிட்டு எங்களை ஆட்கொள்ள வேண்டும்.

திருப்பள்ளியெழுச்சி

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன்தொழுப் படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே!
வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும்படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


விண்ணுலகில் வாழும் தேவர்களும் அடைய முடியாத அரிய பரம்பொருளே! உனக்கு ஏவல் புரியும் அடியார்களாகிய எங்களுக்குப் பேரின்பப் பெரு வாழ்வு தரும் வளம் கொழிக்கும் திருப்பெருந் துறைச் சிவனே! புறத்திலும் அகத்திலும் களிப்பைத் தரும் தேனாய் இனிப்பவனே! திருப்பாற்கடல் அமுதமே! கரும்பே! விரும்புவோர் உள்ளமெல்லாம் வீற்றிருப்பவனே! இந்த உலகத்தின் உயிராய் திகழ்பவனே! எம்பெருமானே! பள்ளியெழுந்து அருள்வாயாக!


Next Story