சபரிமலையில் இன்று மகரஜோதி
சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15–ந்தேதி மாலை நடை திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர். டிசம்பர் 26–ந்தேதி மண்டல பூஜை நடந்தது. அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.
பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30–ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் கூட்டம், கூட்டமாக இருமுடி சுமந்து வந்து, அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.
மகரவிளக்கு பூஜைவிழாவின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
மகரவிளக்கு பூஜையின் போது சாமி அய்யப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து சபரிமலை நோக்கி சரண கோஷம் முழங்க ராஜபிரதிநிதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக புறப்பட்டது.
முன்னதாக பந்தளம் சாஸ்தா கோவிலில் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு தீபாராதனைபந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி ஊர்வலம் நேற்று லாகா சத்திரம் வந்து சேர்ந்தது. அங்கிருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு சரம் குத்தி வந்தடையும்.
அங்கிருந்து சபரிமலை செயல் அதிகாரி, நிர்வாக அதிகாரிகள் தலைமையில் திருவாபரண பெட்டி பெறப்பட்டு, மேளதாளம் முழங்க ஊர்வலமாக சன்னிதானம் எடுத்து செல்லப்படும். மாலை 5.30 மணியளவில் வலிய நடைப்பந்தலுக்கு வரும் திருவாபரண பெட்டிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 18–ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் திருவாபரண பெட்டிகளை பெற்றுக்கொள்கிறார்கள். பின்னர் 18–ம் படி வழியாக கருவறைக்கு கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
ஜோதி தரிசனம்அப்போது 3 முறை பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவார். பொன்னம்பலமேட்டில் தோன்றும் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே இடம் பிடித்து, கூடாரம் அமைத்தும் முகாமிட்டு உள்ளனர்.
மகர விளக்கு பூஜைக்கு பின் 19–ந் தேதி காலை 9.30 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். பின்னர் 20–ந்தேதி காலை 7 மணிக்கு ராஜ பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.
மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.