இயல்பே நிலைத்து நிற்கும்


இயல்பே நிலைத்து நிற்கும்
x
தினத்தந்தி 7 March 2017 9:49 AM GMT (Updated: 7 March 2017 9:48 AM GMT)

அந்த ஜென் துறவியிடம் சீடர்களாக இருந்த பலரும், பல இடங்களில் தங்கள் குருவிடம் கற்றதை பிறருக்கு சொல்லித் தரும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ந்த ஜென் துறவியிடம் சீடர்களாக இருந்த பலரும், பல இடங்களில் தங்கள் குருவிடம் கற்றதை பிறருக்கு சொல்லித் தரும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகும் ஓய்வில்லாமல் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார் அந்த துறவி.

ஒருமுறை அந்த துறவியிடம் கல்வி கற்ற பழைய மாணவர் ஒருவர்  அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். மாணவர், குரு என்ற முறையில் இருவரும் தங்கள் பரஸ்பர விசாரிப்புகளை செய்து கொண்டனர். வந்திருந்த மாணவனின் முகம் சற்று குழப்பத்துடனேயே காணப்பட்டது.

அதைக் கண்ட துறவி, ‘உன் முகம் ஏன் களை இழந்து போய் இருக்கிறது?’ என்று வினவினார்.

துறவி எப்போது கேட்பார் என்று காத்திருந்தது போல், கொட்டித்தீர்த்தான் அந்த மாணவன்.

‘குருவே! நான் உங்களிடம் படித்த தியானத்தைத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும், புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன். ஆனாலும் என் மனம் குழப்பத்தில் தவித்து வருகிறது’ என்று துறவியையே குழப்பினான்.

‘நீ நான் கற்றுக்கொடுத்த தியானத்தை, கவனமாகப் பின்பற்றுவதை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. உன்னால் நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அதில் என்ன குழப்பம் இருக்கிறது?’ என்றார் துறவி.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மாணவன், பின்னர் தொடர்ந்தான். ‘குருவே! நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா? என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாட்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது குற்ற உணர்ச்சியால் என் மனம் கூனிக்குறுகிப் போய்விடுகிறது’ என்றான்.

தன் மாணவனின் வார்த்தையைக் கேட்டு புன்னகைத்தார் துறவி. ‘அப்படியானால் நீ தியானமும் செய்கிறாய். தவறுகளும் செய்கிறாய். அப்படித்தானே?’ என்றார்.

ஒரு வழியாக குருவிற்கு தன்னுடைய மனதை வெளிப்படுத்தியதில் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. ‘ஆமாம் குருவே! இதுதான் என்னுடைய குற்ற உணர்ச்சிக்கு காரணம். நான் இவ்வாறு தவறு செய்வது முறையாகுமா? அதற்குத்தான் உங்களுடைய அறிவுரை வேண்டும்’ என்றான்.

‘உனக்கு என்னுடைய அறிவுரை பெரிதாக ஒன்றும் தேவையில்லை. நீ தினமும் தியானம் செய்; தினமும் தவறு செய். தினமும் தியானம் செய்; தினமும் தவறு செய். சிறிது நாளில் இதில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக நின்று விடும்’ என்றார் துறவி.

பதறிப்போனான் அந்த பழைய மாணவன்.

‘அய்யய்யோ.. குருவே.. ஒரு வேளை தவறு நிற்பதற்கு பதிலாக, தியானம் நின்று போய்விட்டால் நான் என்ன செய்வது?’ என்றான்.

‘அதுவும் நல்லதுதானே.. உன்னுடைய இயல்பு எது என்று புரிந்து விடும் அல்லவா?’ என்றார் துறவி.

Next Story