திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்கு உட்பட்ட பிரான்மலை ஐந்து வகை கோவில்களில் ஒன்றான சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி ரிஷப லக்கனத்தில் நேற்று காலை 5.30 மணியிலிருந்து 6.30 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக பாஸ்கர், ரமேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் பல்வேறு திரவியங்களால் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் வெண்பட்டு சுற்றப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கொடிமரம் தர்ப்பை புற்களால் சுற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு காப்பு கட்டப்பட்டது. பிறகு தம்பிபட்டி, புதுப்பட்டி, தென்மாபட்டு, திருப்பத்தூர், திருத்தளிநாதர்பட்டி உள்ளிட்ட மண்டகப்படிதாரர்கள் மற்றும் சேவைதாரர்களுக்கு காளாஞ்சி வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. நேற்று முதல் நாள் விழாவாக திருப்பத்தூர் வட்டார நாயுடு மகாஜன சங்கம் சார்பில் சூரிபிறை, சந்திரபிறை வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டம்திருவிழாவின் 2–ம் நாள் விழாவாக இன்று(30–ந்தேதி) யாதவர்கள் மண்டகபடி சார்பில் வெள்ளி கேடகத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 1–ந்தேதி காலை 9 மணிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பில் திருத்தளிநாதருக்கு மந்திரநீர் முழுக்காட்டு தீபாராதனை நிகழ்ச்சியும், அகமுடையார் உறவின்முறை சார்பில் இரவு 8 மணிக்கு வெள்ளி கேடகத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெறும். மறுநாள் சோழியவெள்ளாளர் உறவின்முறை சார்பில் திருக்கல்யாண வைபவமும், 6–ந்தேதி தேரோட்டமும், 7–ந்தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.