ஆன்மிகம்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா + "||" + Cuddalore Thirupathirigalliyur Maya is a festival in Palaiswarararkovil

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்,

நடு நாட்டு திருத்தலங்களில் ஒன்றான கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வரர் பூஜையும், இரவு 9 மணிக்கு விநாயகர் வெள்ளி–மூஷிக வாகனத்தில் ராஜ வீதிஉலா காட்சியும் நடந்தது.

நேற்று காலை 5 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சோமஸ்கந்தர் சன்னதியில் யாத்ராதானம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் வலம் வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

கொடியேற்றம்

அதன்பிறகு கோவில் கொடி மரத்திற்கு அருகில் விநாயகர் வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க கொடி மரத்தில் வைகாசி பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு தீபாராதனை நடைபெற்று, பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடந்தது. இரவு 9 மணி அளவில் இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் வீதியுலா, இரவு 7 மணிக்கு பாட்டு, பரதம், வீணை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 7–ந்தேதி வரை காலையில் சிறப்பு வழிபாடும், இரவில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடக்கிறது.

முன்னதாக வருகிற 4–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அதிகார நந்தி கோபுர தரிசனமும், இரவு 10 மணிக்கு தெருவடைச்சான் சப்பரத்தில் சாமி வீதிஉலா புறப்பாடும் நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8–ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் தேரோட்டமும், இரவு பஞ்சமூர்த்திகள் திருக்கோவிலை அடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

9–ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம், வீதியுலா, நடராஜர் திருக்கல்யாணம், இரவு 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு 1 மணிக்கு அவரோகணம், 10–ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு அறுபத்து மூவர் தீபாராதனை, காலை 7.30 மணிக்கு திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், 11–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவமும், 12–ந்தேதி இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் சண்டேஸ்வரர் வீதியுலா காட்சியுடன் விழா முடிவடைகிறது.