ஓசூரில் நாளை நடக்கிறது சந்திர சூடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா


ஓசூரில் நாளை நடக்கிறது சந்திர சூடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 2 Jun 2017 10:54 PM GMT (Updated: 2 Jun 2017 10:53 PM GMT)

ஓசூரில் சந்திர சூடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டையில் மலை மீது பழமை வாய்ந்த சந்திர சூடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் பராமரிப்பு பணிகள் நடந்தன.

கோவிலின் கோபுரம் முன்பு நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், யாக சாலை அலங்காரம் நடந்தது. மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், இரவு 8 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தனம் சாத்துதல், முதல் கால யாக பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தன.

2, 3–ம் நாள் நிகழ்ச்சிகள்

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன், டி.வி.எஸ். நிறுவன நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசன், ஓசூர் நகர தி.மு.க. செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாநில பா.ஜனதா இளைஞர் அணி செயலாளர் நாகராஜ், பா.ஜனதா மாவட்ட செயலாளர் ராஜி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இன்று (சனிக்கிழமை) காலை விசே‌ஷ சாந்தி, 2–ம் கால யாக பூஜை, ஹோமம், மாலை மூலர், மரகதாம்பிகைக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், இரவு 8 மணிக்கு 3–ம் கால யாக சாலை பூஜை, ஹோமம், நாடி சந்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 4–ம் கால யாக சாலை பூஜை, ஹோமம், காலை 6 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், 8 மணி முதல் 8.30 மணி வரை அனைத்து பரிவார மூர்த்திகள், மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

அமைச்சர்கள் பங்கேற்பு

காலை 10 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம், மாலை 4 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கின்றன. இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா, ஓசூர் நகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் நித்யா, செயல் அலுவலர் ராஜரத்தினம், ஓசூர் கல்யாண சூடேஸ்வரர் கமிட்டி தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் மற்றும் உறுப்பினர்கள், கோவில் பணியாளர்கள், மற்றும் ஓசூர் பக்தர்கள் குழுவினர் செய்து வருகிறார்கள்.



Next Story