ஆன்மிகம்

அமிர்தம் கிடைக்கச் செய்த கூர்ம அவதாரம் + "||" + Amrit is made available Kurma incarnation

அமிர்தம் கிடைக்கச் செய்த கூர்ம அவதாரம்

அமிர்தம் கிடைக்கச் செய்த கூர்ம அவதாரம்
வலோகத்தில், தேவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் கந்தர்வர்கள் மற்றும் வித்யாதரர்கள். இவர்களில் வித்யாதரர்கள் என்போர், கல்வி மற்றும் கலைகளில் சிறப்புற்று விளங்குபவர்கள்.
21–6–2017  கூர்ம ஜெயந்தி

லோகத்தில், தேவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் கந்தர்வர்கள் மற்றும் வித்யாதரர்கள். இவர்களில் வித்யாதரர்கள் என்போர், கல்வி மற்றும் கலைகளில் சிறப்புற்று விளங்குபவர்கள். ஒருமுறை, வித்யாதரப் பெண் ஒருவர், திருமாலையும், லட்சுமியையும் துதித்து பாடி வீணை மீட்டினாள். இதனால் மனம் மகிழ்ந்த லட்சுமி தேவி, தான் சூடியிருந்த மணம் மிகுந்த மாலை ஒன்றை, அவளுக்கு பரிசாக வழங்கினாள். அதை பிரசாதமாக ஏற்ற வித்யாதரப் பெண், அங்கிருந்து புறப்பட்டாள். வழியில் அந்தப் பெண், துர்வாச முனிவரை சந்தித்தாள். துர்வாச முனிவர், லட்சுமி தேவியின் தீவிர பக்தன் என்பதால், தேவி தனக்கு அளித்த மணம் மிகுந்த மாலையை, வித்யாதர பெண், துர்வாச முனிவருக்கு வழங்கினாள். அதை வாங்கிய துர்வாசர் அதை தன்னுடைய சடா முடியில் சூடிக்கொண்டார்.

துர்வாச முனிவர் சிறிது தூரம் சென்றபோது, எதிரில்  யானையின் மீது வந்து கொண்டிருந்தான் இந்திரன். அவனுக்கு அந்த மாலையைக் கொடுத்தார் துர்வாசர். அவன் அதை கண்களில் ஒற்றி, யானையின் மத்தகத்தின் மீது வீசினான்.

மாலை, யானையின் மீது விழுந்ததும், அதற்கு ஞானம் வந்து, தவமிருக்க காட்டிற்கு ஓடியது. ஓடிய வேகத்தில், மாலை கீழே விழுந்து யானையின் காலடியில் மிதிபட்டது. அதைப் பார்த்ததும், துர்வாசருக்கு கோபம் வந்து விட்டது.

‘தேவேந்திரா! செல்வச் செருக்கில், நான் அளித்த புனிதமான மாலையின் பெருமையை உணராமல், யானை மீது வீசி விட்டாய். அது தரையில் விழுந்து புனிதம் கெட்டு விட்டது. உன் இத்தகைய அலட்சிய மனோபாவத்திற்காக, நீயும், தேவர்களும் உங்கள் பலத்தை இழந்து துன்புறுவீர்கள்’ என்று சாபமிட்டார்.

பலமிழந்த இந்திரனும், தேவர்களும் அசுரர்களிடம் சிக்கி அல்லல்பட்டனர்.

திருமாலைச் சரணடைந்து தங்கள் கஷ்டத்தைக் கூறி கதறினர். பாற்கடலைக் கடைந்து, அதிலிருந்து கிடைக்கும் அமிர்தத்தைச் சாப்பிட்டால், இழந்த பலத்தைப் பெற்று அசுரர்களை வெல்லலாம் என, யோசனை கூறினார் திருமால். அதனால், மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தனர். ஆனால் மலை சீராக இல்லாமல் சாய்ந்தது. அதை சீராக்க வேண்டி மீண்டும் திருமாலிடம் சரணடைந்தனர். உடனே திருமால், மிகப்பெரிய கூர்ம (ஆமை) உருவம் கொண்டு மலையை தன்னுடைய முதுகில் தாங்கிக்கொண்டார். இதையடுத்து பாற்கடல் கடையப்பட்டு தேவர்களுக்கான அமிர்தம் கிடைத்தது என்பது புராணம் கூறும் தகவல்.  

தசாவதாரங்களில் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் முதலான அவதாரங்களுக்கு, பல இடங்களில் கோவில் இருக்கிறது. ஆனால், இரண்டாம் அவதாரமான கூர்ம அவதாரத்திற்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீகூர்மத்தில் மட்டுமே கோவில் உள்ளது.

கடலில் தோன்றிய அரிய பொருட்கள்

மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம (ஆமை) அவதாரம். மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி என்ற பாம்பு மிகுந்த துன்பத்தை அடைந்தது. வலி பொறுக்க முடியாமல் அது, வி‌ஷத்தை கக்கியது. அதே வேளையில் கடலுக்குள் இருந்தும் முதன் முதலில் வி‌ஷம் ஒன்று தோன்றியது. பாம்பின் வி‌ஷமும், கடலில் இருந்து வெளிப்பட்ட வி‌ஷமும் சேர்ந்து, ஆலகால வி‌ஷமாக மாறியது. இந்த வி‌ஷத்தின் வேகம் உலகத்தையே அழிக்கும் சக்தி கொண்டதாக இருந்தது. இதனால் தேவர்கள் அனைவரும் ஈசனை வேண்டினர். இதையடுத்து சிவபெருமான் அந்த வி‌ஷத்தை ஒன்று திரட்டி, தானே உண்டு உலகை காப்பாற்றினார்.

வி‌ஷத்தின் துன்பம் நீங்கியதும், மீண்டும் பாற்கடலை கடையும் பணி தொடங்கியது. அப்போது கடலில் இருந்து காமதேனு என்ற பசு வெளிப்பட்டது. இந்தப் பசு வேண்டியதைத் தரும் வல்லமை படைத்தது. இது பார்வதியிடம் சேர்ந்தது. அடுத்து பொன்மயமான ஒளியுடன் உச்சைசிரவஸ் என்ற குதிரை தோன்றியது. இந்தக் குதிரை பறக்கும் ஆற்றல் படைத்தது.

அதற்கு அடுத்ததாக ஐராவதம் என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை நிற யானை தோன்றியது. இது இந்திரனது வாகனம் ஆனது. இதனை அடுத்து ஐந்து மரங்கள் பாற்கடலில் இருந்து வெளிவந்தன. பஞ்ச தருக்கள் என்று சொல்லப்படும் அவை அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகும். இவற்றில் கற்பக மரத்தின் கீழ் இந்திரன் அமர்ந்தான்.  கேட்பதைக் கொடுக்கும் சக்தி கொண்டது கற்பகம்.

அடுத்து கவுஸ்துபம் என்ற மணிமாலை தோன்றியது. இதனை அணிபவர்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் தரக்கூடியது. இதனை திருமால் அணிந்தார். அதற்குப்பின் ஜேஷ்டாதேவி தோன்றினாள். இவளை மூதேவி என்றார்கள். (மூத்த தேவியே மூதேவி ஆனாள்.) இவளை யாரும் ஏற்காததால் பூலோகம் சென்றாள்.

இவளுக்கு அடுத்து மிக அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் தோன்றினார்கள். இவர்களை தேவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்து தோன்றியது மது! இந்த மது தோன்றும் போது அதன் அதிதேவதையான சுராதேவியுடன் மதியை மயக்கும் அழகு மங்கையர் கணக்கற்ற தோழியர்களுடன் தோன்றினார்கள். அவர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குப்பின் தோன்றியவள்தான் ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. மலர் மாலையை ஏந்தியவளாய் அவதரித்த இவள், தனக்குத் தகுந்த மணாளன் மகாவிஷ்ணுவே என்பதனை அறிந்து, மகாவிஷ்ணுவிற்கு மாலை அணிவித்து திருமாலின் தேவியானாள்.

அடுத்து வி‌ஷக் கொடுமையை நீக்கும் மூலிகையுடன் சந்திரன் வெளிப்பட்டான். மேலும் அவன் கைகளில் நீலோத்பல மலர், மோக சாஸ்திரச் சுவடிகள் இருந்தன. அடுத்துத் தோன்றியது ஸ்யமந்தகமணி. இதனைச் சிந்தாமணி என்றும் சொல்வர். அதை சூரியன் ஏற்றான். கடைசியில் அவதரித்தவர் தன் வந்திரி. நான்கு கைகளுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந்தார். இவர் மருத்துவர்களின் தேவதை ஆனார்.

தன்வந்திரியின் கையிலிருந்த அமிர்தகலசத்தைப் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பலத்த போட்டி இருந்தது. இதனை அறிந்த திருமால் மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தைப் பங்கிட்டுத் தரும் வேளையில்தான் சில நிகழ்வுகள் நடந்தன. அசுரன் ஒருவன் குறுக்கு வழியில் சூரிய  சந்திரர்களுக்கு இடையில் அமிர்தம் பெற முயற்சிக்கையில், மோகினியானவள் அமிர்தம் வழங்கிய அகப்பையால் அவனை வெட்ட, அவன் இரண்டு துண்டுகளாகி ராகு  கேது ஆனான்.

மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்ததன் விளைவாக பல அரிய பொருட்கள் கிடைத்தன. அதேசமயம் பல நிகழ்வுகளும் நடைபெற்றன. அனைத்தும் சுபமான நிகழ்வுகள் ஆகும்.

பழமொழியின் பொருள்

உலகைக் காக்க தசாவதாரம் எடுத்தார் திருமால். அதில் ஒன்று கூர்ம அவதாரம். கூர்மம் என்பதற்கு ‘ஆமை’ எனப் பொருள். அவர், இந்த வடிவத்தை தன் அவதாரத்துக்கு தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா? ஆபத்து வரும் போது, ஆமை, தன் உறுப்புகளை ஓட்டுக்குள் அடக்கி, பாதுகாத்துக் கொள்ளும் தன்மையுடையது. மனிதனும், கெட்ட சிந்தனைகள் தம்மைத் தாக்கும் போது, தன் மனதைக் கட்டுப்படுத்தி, நன்மை பெற வேண்டும் என்று உணர்த்த தோன்றியதே இந்த அவதார நோக்கமாகும்.

‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்பார்கள். அப்படியிருக்க, திருமால் இந்த வடிவம் எடுத்தது சரிதானா? என்று எண்ணத் தோன்றும். இங்கு ஆமை என்று சொல்லப்படுவது, இல்லாமை எனும் வறுமை, கல்லாமை, பொறாமை ஆகியவை ஆகும். வீடு என்பதற்கு மனம் என்ற பொருளும் உண்டு. பொறாமை புகுந்த மனம் உருப்படாது என்பதே அந்தப் பழமொழியின் பொருளாகும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை