சுயம்பு நடராஜர் அருளும் திருநல்லம்


சுயம்பு நடராஜர் அருளும் திருநல்லம்
x
தினத்தந்தி 20 Jun 2017 12:30 AM GMT (Updated: 19 Jun 2017 12:01 PM GMT)

இந்த உலகம் எதிலிருந்து தோன்றியது?. ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவம் இதற்குத் தகுந்த பதிலைத் தரும்.

ந்த உலகம் எதிலிருந்து தோன்றியது?. ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவம் இதற்குத் தகுந்த பதிலைத் தரும். அவரது நான்கு திருக்கரங்களில், இரண்டு திருக்கரங்கள் நடனத்திற்கேற்ப அபிநயம் பிடிக்க, மற்ற இரண்டு கரங்களும் அக்னியையும், உடுக்கையையும் பிடித்தபடி உள்ளது. ஒலியினைக் குறிப்பது உடுக்கை. ஒளியை குறிப்பது அக்னி. ஒலியையும், ஒளியையும் உருவாக்கி, இறுதியில் அவற்றைத் தன்னில் ஒடுக்குவதும் நடராஜப் பெருமானே.

ஆம்! ‘அவனின்றி அணுவும் அசையாது’. உலக இயக்கமே நடராஜப் பெருமானின் திருநடனத்திலேயே இயங்குகிறது. ஒலியாலும், ஒளியாலும் உலகைப் படைத்து, பின் தனக்குள்ளே ஒடுக்கிக் கொள்ளும் தத்துவத்தை வெளிப்படையாக உணர்த்தும், அதி அற்புதக் கோலம் நடராஜரின் திருவடிவம். உணர்வதற்கு அரிதான இந்த உருவத்தை சிவாலயங்களில் கண்டு தரிசிக்கலாம். இப்படிப்பட்ட நடராஜரின் திருமேனி பெரும்பாலும் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆனால், கோனேரிராஜபுரத்தில் உள்ள சிவாலயத்தில் ஐந்தடி உயர பஞ்சலோகத்தால் ஆன சுயம்பு நடராஜர் அருள்பாலிக்கிறார். சிற்பி ஒருவர், உலைக்   களத்தில் நடராஜரை வார்க்கும் போது, சிவபெருமானே நேரில் வந்து நடராஜராய் சமைந்த அதி அற்புத சுயம்பு நடராஜர் விக்கிரகம் இங்கு உள்ளது. இவரது திருவுருவத்தில், மனித உடலில் இருப்பது போன்று மார்பில் மருவும், உடலில் கொழுப்புக் கட்டியும் , நகங்கள், முடியும் காணப்படுகின்றன.

இந்த உயிரோட்டமான விக்கிரகம் இத்தலத்திற்கு எப்படி வந்தது?. வாருங்கள், கொஞ்சம் கோனேரிராஜபுரம் ஆலயத்தை தரிசித்து தெளிவுபெறுவோம்.

அப்பர், சம்பந்தர் ஆகியோரின் பாடல் பெற்ற திருத்தலம் இது. கோனேரிராஜபுரம் சிவாலயத்தில், நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்.

சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு குழந்தையாக இடுப்பில் ஏந்தியபடி தோன்றினாள்.

அவர்கள் இருவரும் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் கேட்டார்கள். இழி குலத்தோர் எனக்கருதி அறியாமையால் அங்கிருந்தவர்கள், இறைவனுக்கு தண்ணீர் தர மறுத்தனர். சிவனும், அம்பிகையும் உலைக்களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர்.

சிலையை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி, ‘உலைக் களத்தில் ஏது தண்ணீர்?. வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது, குடியுங்கள்’ என்று அந்த தம்பதிகளிடம் நீட்டினார். அவர்களும் அதனை வாங்கிப் பருகிவிட்டனர். மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும், சிவகாமி அம்பாள் சிலையும் ஆக மாறிப்போனார்கள். அப்போது அங்கு வந்த மன்னன் சிலையைப் பார்த்தான். நடராஜரின் சிலையில் நகங்கள், உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.

‘இவ்வளவு அதி அற்புதமான சிலையை எவ்வாறு செய்ய முடிந்தது?’ என்று சிற்பியைக் கேட்டான். சிற்பியும் நடந்ததைக் கூறினார். சிற்பி பொய்யுரை கூறுவதாக நினைத்த மன்னன், அவரை வெட்ட வாளை ஓங்கினான். அப்போது வாள் சிலையின் காலில் பட, அதில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதே நேரம் மன்னனுக்கும் தொழுநோய் உண்டானது. தன் தவறை உணர்ந்த மன்னன், ஈசனிடமும், சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக ஈசனிடம் பரிகாரமும் கேட்டான்.

‘இவ்வூர் ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம்’ என்று ஈசன் அருளினார். அதன்படி செய்து மன்னன் குணமடைந்தான். இத்தல வைத்தியநாத சுவாமிக்கு வைகாசி விசாகத்தில் சிறப்பாக உற்சவம் நடைபெறுகிறது. இன்றும் தீர்க்க முடியாத சகல நோய்களையும் இத்தல வைத்தியநாத சுவாமி தீர்த்து வைப்பதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பக்தர்கள். இத்தல வைத்தியநாத சுவாமி சன்னிதியின் எதிரில் முத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவர் என்பதை சொல்லாமல் சொல்கின்றது.

மார்கழி திருவாதிரை, ஆனி திருமஞ்சனம் அபிஷேகம் இத்தல சுயம்பு நடராஜருக்கு சிறப்பாக செய்யப்படுகிறது. ஈசனே மனித வடிவில் வந்து, இத்தலத்தில் இருக்கும் நடராஜராய் உருவானதால், ஆனி திருமஞ்சன நாளில் இவரை வணங்கி வழிபட்டால் வேண்டியன யாவும் நமக்கு கிடைக்கும்.

திருவீழிமிழலை, திருமணஞ்சேரி போலவே இங்கும் ஈசன், ‘மாப்பிள்ளை சுவாமி’யாக திருக்கல்யாண கோலத்தில் உற்சவராக எழுந்தருளியுள்ளார். திருமால் அம்பிகையை தாரை வார்த்து தரும் கோலத்தில் உடன் எழுந்தருளியிருக்கிறார். இத்தல மூலவர் உமாமகேஸ்வரர் ஆவார். இவர் மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தனி சன்னிதியில் அங்கவளநாயகி அம்மன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தல ஈசனை ‘பூமிநாதன்’ என்றும் அழைக்கிறார்கள். நிலம், வீடு வாங்க, வீடு கட்ட இந்த இறைவனின் வழிபாடே சிறப்பு. மேலும் வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்சினை உள்ளவர்களும் இங்கு வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

பூமாதேவி வழிபடுவதற்காக  தேவ சிற்பியான விஸ்வகர்மா ‘திருநல்லம்’ என்னும் கோனேரி ராஜபுரத்தில் ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி, சூட்சுமாகம முறைப்படி சிவலிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.இத்தல மூலவர் உமாமகேஸ்வரர் தேவகுரு பிரகஸ்பதியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். எனவே இத்தல ஈசனை வழிபட்டால் குருபார்வை கிட்டும். பல தலங்களிலும் அகத்தியருக்கு, ஈசன் தமது திருக்கல்யாண காட்சியை காட்டி அருளியுள்ளார். அதில் ஒன்று கோனேரிராஜபுரம் திருத்தலம். திருமணத் தடை உள்ளவர்கள் இத்தல மூலவரையும், உற்சவர் மாப்பிள்ளை சுவாமியையும் நெய் தீபம் ஏற்றி, வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், திருமணத் தடைகள் அகன்று நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.

திருவிடைமருதூரில் இருந்து தெற்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாவடுதுறையில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், எஸ்.புதூரில் இருந்து தெற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது திருநல்லம்.

–சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்.

Next Story