ஜென் கதை : நிகழ்கால உண்மையே ஞானம்


ஜென் கதை : நிகழ்கால உண்மையே  ஞானம்
x
தினத்தந்தி 17 July 2017 11:00 PM GMT (Updated: 17 July 2017 2:05 PM GMT)

அது ஒரு புகழ்பெற்ற இறை தலம். அங்குள்ள கோவில் எப்போதும் பக்தர்கள் கூட்டத் தால் நிரம்பி வழியும்.

து ஒரு புகழ்பெற்ற இறை தலம். அங்குள்ள கோவில் எப்போதும் பக்தர்கள் கூட்டத் தால்  நிரம்பி வழியும். சாதாரண பக்தர்கள் மட்டுமின்றி, ஞானிகளும், துறவிகளும் கூட அங்கே குவிவார்கள். அந்த ஆலயத்தில் ஒரு குரு இருந்தார். அவர் பெரும்பாலும் மவுனத்தை கடைப்பிடிப்பவர். பலரும் வந்து அவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள்.

ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் தத்துவங்களையும், சூத்திரங்களையும் கரைத்துக் குடித்தவர். ஊர் ஊராக பயணம் செய்து, அறிஞர்கள் பலரையும் தன்னுடைய வாதத் திறமையால் தோற்கடித்து பெரும் புகழ் பெற்றவர். அவர் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்குள்ள ஆலயத்தை வழிபடுவது மட்டுமின்றி அங்குள்ள சான்றோர்களிடம் வாதாடி தன்னுடைய புலமையை பறைசாற்றுவதையும் இயல்பாகக் கொண்டிருந்தார்.

அதன்படி இந்த ஆலயத்திற்கு வந்த ஞானி, கோவிலை தரிசித்து விட்டு, அங்கிருந்த குருவைச் சந்தித்தார். அவரிடம் தன்னுடைய வாதத்  திறமையைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஞானிக்கு உருவானது. அவர் தன்னுடைய தத்துவ உரையாடலைத் தொடங்கினார். ஆனால் குரு எதுவுமே பேசவில்லை. மவுனமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

நிறைய உவமைகள், விளக்கங்களுடன் ஆரவாரமாகப் பேசிய ஞானி, இறுதியில் ‘அனைத்தும் மாயை’ என்ற கருத்தை முன் வைத்தார்.

அவர் பேசிய எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த குரு, கடைசியில் ‘அப்படியா?’ என்றார்.

உடனே அந்த ஞானி, ‘ஆமாம். இந்த உலகம் பொய். நாம் கண்ணால் காணும் அனைத்தும் மாயை. எஞ்சி நிற்பது சூன்யம் தான்’ என்றார்.

மேலும் ‘புத்தர், பவுத்தம், மனம் எல்லாம் வெறும் சூன்யம்’ என்றார்.

இப்போதும் குரு எதுவும் சொல்லவில்லை. அதைக் கண்டதும் தன்னுடைய கருத்துக்கு எதிர் கருத்து பேச முடியாதபடி ஆகிவிட்டார் போல என்று நினைத்த ஞானி, ‘அரசன் என்பதும்.. ஆண்டி என்பதும் எப்படி சமூக மாயையோ, ஏழை என்பதும், செல்வந்தன் என்பதும் எப்படி நிலையற்றதோ, அதே போலத்தான் அறிஞன் என்பதோ, அசடன் என்பதோ பொய்யானது. ஞானம்– அஞ்ஞானம் போன்றவையும் மாயையே. வெற்றி– தோல்வி, உழைப்பு– சோம்பல் எல்லாம் கற்பனையே, சூன்யம் தான் நிரந்தரமானது’ என்றார்.

ஞானி தன்னுடைய கருத்தைக் கூறி முடித்ததும், குரு ஒரு மூலையில் இருந்த ஊன்றுகோலை எடுத்து, ஞானியின் மொட்டை தலையில் ஓங்கி ஒன்று போட்டார்.

‘ஓ...’ என்று அலறிய அந்த ஞானி, தன் தலையைத் தடவிக்கொண்டே ‘என்ன இப்படி மட்டமாக நடந்து கொள்கிறீர்கள்?’ என்று சீறினார்.

‘என்ன சொல்கிறீர்கள்?’ என்று புரியாதது போல் கேட்டார் குரு.

‘எதற்காக என்னை அடித்தீர்கள்?. உங்களைப் போன்ற ஒரு துறவியிடம் இருந்து நான் இப்படிப்பட்ட செயலை எதிர்பார்க்கவில்லை’ என்றார், ஞானி.

இப்போது குரு பேசத் தொடங்கினார். ‘அடியாவது? தடியாவது? அடி– வலி, கூச்சல்– சந்தோ‌ஷம் எல்லாமே மாயை. வலி என்பது பொய். கோபம் என்பது மனதின் பிரமை. இவை எல்லாமே சூன்யம் தான். எல்லாமே  சூன்யமாய் இருக் கும் போது வலி என்பது ஏது? கோபம் என்பது ஏது? ஓ.. என்று அலறினீரே.. அந்தக் கூச்சல் பொய்தானே. சூனியம் கூச்சலை வெளியிடுமா?’ என்றார்.

திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தார், அந்த ஞானி.

ஒருவர் மகா ஞானம், பிரம்ம ஞானம், ஏக ஞானம் என்று பலவற்றையும் கற்பதனாலேயே, உண்மை என்ற நிகழ்கால ஞானம் பொய்யாகிவிடாது.

Next Story