ஆன்மிகம்

நன்மைகள் தரும் நவ ஆவரண பூஜை + "||" + Benefits to Nava Avarana Puja

நன்மைகள் தரும் நவ ஆவரண பூஜை

நன்மைகள் தரும் நவ ஆவரண பூஜை
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாகவும், வேதங்கள் போற்றும் வேதநாயகியாகவும், உலகம் அனைத்திற்கும் தாயாகவும், மகா சக்கரவர்த்தினியாக பதினான்கு உலகங்களையும் அரசாட்சி புரிபவள் மாதா புவனேஸ்வரி ஆவாள்.
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாகவும், வேதங்கள் போற்றும் வேதநாயகியாகவும், உலகம் அனைத்திற்கும் தாயாகவும், மகா சக்கரவர்த்தினியாக பதினான்கு உலகங்களையும் அரசாட்சி புரிபவள் மாதா புவனேஸ்வரி ஆவாள். அம்பிகையே அனைத்திற்கும் மையம் என்று போற்றி வழிபடும் முறை ‘சாக்தம்’ என்று வழங்கப்படுகிறது. அந்த முறையில் கடைப்பிடிக்கப்படும் பூஜைகளில் முதன்மையானது நவ ஆவரண பூஜையாகும்.

அம்பிகை பரிவாரங்கள்

மாதா புவனேஸ்வரி அம்பிகை, எல்லைகள் ஏதுமில்லா பாற்கடலின் நடுவே, ஸ்ரீசக்கரம் என்ற ஸ்ரீநகரத்தின் நடுவில் வீற்றிருக்கிறாள். கற்பக விருட்சங்கள் புடை சூழ, கேட்டதை அளிக்கும் சிந்தாமணி என்ற ரத்தினக்கற்களால் ஆன கரு வறையில், தனது பரிவாரங்களான மந்த்ரிணி, வராஹி, அச்வாரூடா என்ற சக்திகளுடன், மகா ராஜராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச பிரம்ம ஆசனத்தில் அமர்ந்து உலகம் அனைத்தையும் பரிபாலித்து வருகிறாள்.

ஒன்பது வாசல் கோட்டை

ஸ்ரீசக்கரம் என்பது பொன்னாலும், ரத்தினங்களாலும் இழைக்கப்பட்டு, ஒன்பது பிரகாரங்களின் வாசல்கள் கொண்ட அற்புத கோட்டை ஆகும். அதன் மத்தியில் கோடி சூரிய பிரகாசத்துடன், கோடி சந்திரர்களின் குளிர்ச்சியுடனும், இமை மூடாத கண் கொண்ட மீன் போன்றும், மாதுளம்பூ நிறத்துடனும், ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கிரீடத்துடனும், அபயம் அளிக்கும் கரங்களுடனும் வேண்டிய வரம் அருளும் வகையில் மாதா புவனேஸ்வரி வீற்றிருக்கிறாள். ஸ்ரீசக்கரத்தில் உள்ள நாற்பத்து மூன்று முக்கோணங்களிலும் ஒவ்வொரு அம்பிகை இருந்து மாதா புவனேஸ்வரிக்கு சேவை புரிகிறார்கள். குதிரை படையை அச்வாரூடா, யானை படையை கஜமுகி, மந்திரியாக மந்த்ரிணி ஆகிய அம்பிகைகள் பரிபாலனம் செய்கிறார்கள்.

நவ ஆவரண பூஜை

ஸ்ரீசக்கரத்தில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்கள் மற்றும் நடுநாயகமாக விளங்கும் மாதா புவனேஸ்வரிக்கும் சகல அம்சங் களுடன் செய்யப்படுவது நவ ஆவரண பூஜையாகும். அதாவது, ஒன்பது வரிசைகளில் உள்ள தெய்வங்களுக்கான பூஜை, அர்ச்சனை, தர்ப்பணம் போன்றவற்றை குறிக்கிறது. ஒவ்வொரு வரிசைக்கும் உரிய பூஜை முடிந்ததும் ஒரு தீபாராதனை செய்யப்படும். அவ்வாறு ஒன்பது தீபாராதனைகளுக்கு பிறகு சுவாசினி பூஜை, கன்னியா பூஜை போன்றவை நடைபெறும்.

பூஜை வரிசை

குறிப்பாக, புரஸ்சரணம் என்பது உடனடியாக பலன் தரும் பூஜை முறையாகும். அது அர்ச்சனை, ஹோமம், தர்ப்பணம், பலி, போஜனம் எனும் வரிசை முறைகளில் கடைப்பிடிக்கப்படும். அதுபோன்ற விஸ்தாரமான பூஜையே நவ ஆவரண பூஜை ஆகும். இதில், ஹோமம் இல்லை என்றாலும், பூஜை செய்யும் சாதகன் தன்னையே ஹோம அக்னியாக பாவித்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

இருவித பூஜை

இந்த நவ ஆவரண பூஜைக்கு உள்ள ஒரு சிறப்பு தர்ப்பணம் மற்றும் பூஜை ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இணைந்து செய்யப்படுவதாகும். அதாவது, பூஜைக்கு மலர்களும், தர்ப்பணத்திற்கு பாலில் நனைக்கப்பட்ட இஞ்சி துண்டும் சேர்த்து அர்ச்சிப்பது இந்த பூஜையில் சிறப்பான அம்சமாகும். மேலும், குரு ஸ்துதியில் ஆரம்பித்து குரு வந்தனத்தோடு பூஜை முடிவதும் குறிப் பிடத்தக்கது.

பூஜை முறைகள்

மண்டப பிரவேச பூஜை, பூத சுத்தி, சங்கல்பம், குரு ஸ்தோத்திரம், அமரும் ஆசனத்திற்குரிய பூஜை, பூஜையில் ஈடுபடுபவர் தன்னை மந்திர மண்டலத்திற்குள் உட்படுத்திக்கொள்ளும் பூஜை, திக் பந்தனம், பிராண பிரதிஷ்டை, ஸ்ரீசக்கர பூஜை, அங்கம் மற்றும் கர நியாச பூஜைகள், கலச பூஜை, சங்கு பூஜை, அஷ்டகந்தம் எனும் வாசனை திரவியங்கள் கலந்த பாலுக்கு உரிய பூஜை, ஆவாகன உபசார பூஜை, சத்து மாவை விளக்காக கொண்டு தீபாராதனை காட்டும் மங்கள ஆராத்ரிகம் என்ற பூஜை, சதுராய தனம் எனும் சிறப்பு பூஜை, குரு மண்டல பூஜை ஆகியவற்றை தொடர்ந்து ஒன்பது வரிசைகளுக்கான பூஜை, பஞ்ச பஞ்சிகா பூஜை, மாதா புவனேஸ்வரிக்கு சிறப்பு பூஜை, தூப தீப நிவேதன பூஜை, பலிதானம், குரு வந்தனம், சுவாஸினி பூஜை, கன்யா பூஜை, வேத கோஷம், நிருத்ய அர்ப்பணம் என்ற நாட்டியம், கான அர்ப்பணம் என்ற பாடல் என்ற முறையில் நவ ஆவரண பூஜை அமைகிறது.

பிரசாதம்

பூஜை முடிவில் ஸாமான்ய அர்க்கியம் எனும் வலம்புரி சங்கில் வைத்து பூஜை செய்த தீர்த்தம் தெளிக்கப்படுவதோடு, விசேஷ அர்க்கியம் என்ற பூஜை செய்து பால் விநியோகம் செய்யப்படும். சங்கு தீர்த்தம் மூலம் உடல் சுத்தமும், பூஜிக்கப்பட்ட பால் மூலம் மன சுத்தமும் கிடைப்பதாகவும் ஐதீகம். இந்த இரண்டு பிரசாதங்களையும் பெறுபவர்கள் அம்பிகையின் பரிபூரண அருளையும், பூஜையின் முழு பலனையும் பெறுகிறார்கள் என் பதும் ஐதீகம்.

புராணங்களில்..

ஸ்ரீசூக்தம், ஸ்ரீதேவசூக்தம் போன்ற சுருதிகளிலும், தேவ உபநிஷதம், கோனோபநிஷதம், பாவேனாபநிஷதம் போன்ற உபநிஷதங் களிலும், லலிதா சகஸ்ரநாமம் அடங்கிய பிரம்மாண்ட புராணம், துர்கா சப்தசதி, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் நவ ஆவரண பூஜை முறைகள் மற்றும் குறிப்புகள் உள்ளன.

தரிசன பலன்கள்

குழந்தை பாக்கியம்

சகல தோஷ நிவர்த்தி

பிள்ளைகள் கல்வி மேன்மை

இனிய இல்லறம்

அஷ்ட ஐஸ்வர்ய பிராப்தி

உத்தியோக, வியாபார நன்மைகள்

நோய்கள் நீங்குதல்

விருப்பம் நிறைவேறுதல்

சவுகரியமான வாழ்வு