சிறப்பு சேர்க்கும் புன்சிரிப்பு
புன்னகையை அரபி மொழியில் ‘தபஸ்ஸும்’ என்பார்கள். இச்சொல் திருக்குர்ஆனிலும் இடம்பெற்றிருக்கிறது.
மனமகிழ்ச்சியின் மறுஅடையாளம் தான் நமது புன்சிரிப்பு. எப்போதுமே நாம் ‘உம்’ என்ற முகத்துடன் சும்மா இருப்பதை எவர்தான் விரும்புவார்.?
இதனால் தான் ‘மலர்ந்த முகத்துடன் ஒருவரை நீங்கள் வரவேற்பது தர்மச் செயல்’ என்று கூறுகிறது இஸ்லாம்.
நமது சிரிப்புகளில் ஆனந்தச்சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, அகங்காரச் சிரிப்பு, அநியாயச் சிரிப்பு, அட்டகாசச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, எகத்தாளச் சிரிப்பு, ஏமாளிச் சிரிப்பு, ஏமாற்றுச் சிரிப்பு, வஞ்சகச் சிரிப்பு, வைராக்கியச் சிரிப்பு என தான் எத்தனை எத்தனை வகை? அத்தனையிலும் இந்த மென்சிரிப்பான புன்சிரிப்புக்கு ஈடுஇணை இல்லை.
‘நீங்கள் குறைவாகச் சிரியுங்கள்; அதிகமாக அழுங்கள்’ என்று திருக்குர்ஆன் கூறுவதிலிருந்தே சின்னஞ்சிறிய சிரிப்பு, அது புன்னகைச் சிரிப்புதான் என்று எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம். புன்னகையை அரபி மொழியில் ‘தபஸ்ஸும்’ என்பார்கள். இச்சொல் திருக்குர்ஆனிலும் இடம்பெற்றிருக்கிறது.
இப்பேருலகை ஆண்ட அரசர்களில், பேரறிவாளரான சுலைமான் நபியும் ஒருவர். ஒருமுறை அவர் தமது படைகளுடன் சென்று கொண்டிருந்த போது, பாதையின் குறுக்கே ராணி எறும்பு பேசியதைக் குறித்து திருக்குர்ஆன் கூறுகிறது இப்படி:
‘‘இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) ‘எறும்புகளே, நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கிவிடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)’ என்று கூறிற்று. அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், ‘என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள்புரிவாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக’ என்று பிரார்த்தித்தார்’’. (27:18,19)
எறும்புகள் முன்னெச்சரிக்கை விடுத்ததை செவியுற்ற சுலைமான் நபி புன்னகைத்துச் சிரித்தார் என்றும், அந்நேரத்தில் நல்லதொரு பிரார்த்தனை ஒன்றையும் செவ்வனே செய்து கொண்டார் என்றும் குர்ஆன் கோடிட்டுக்காட்டிச் செல்கிறது.
எனவே, புன்முறுவல் என்பது எவருக்கும் விதிவிலக்கான ஒன்றல்ல. எந்தவொரு அற்புதங்களை காணும் போதும், அந்த இறைவனின் அற்புதப் படைப்புகளை அதன் ஆற்றல்களைக் கண்டு சற்று பிரமிக்கும் வேளையில் கொஞ்சம் புன்முறுவலை அங்கே சிந்தித்துச் சிந்துவதும் வரவேற்கத்தக்கதே. கூடவே மனமகிழ்ச்சியுடன் உள்ள அந்த ஒரு நல்ல நேரத்தை பெரும்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு இறைவனிடத்தில் பிரார்த்தனையும் செய்து கொள்ளவும் வேண்டும்.
இறுக்கமான வறுவல் முகத்தை நமது புன்முறுவல் சிரிப்புத் தான் மென்மைப் படுத்தியும், மேன்மைப்படுத்தியும் வைக்கும் என்றால் அது மிகையல்ல.
நமது வாழ்வாதாரமான வியாபாரத்தை விரிவுபடுத் திக் கொள்ளவும், நமது வாடிக்கையாளர்களை வசப்படுத்திக் கொள்ளவும் பெரிதும் துணைபுரிவது இந்த புன்னகை தான். வணிக நுணுக்கங்களிலும், நுண் வணிகங்களிலும் இப்புன்னகை தான் பெரும் பங்கு வகிக்கிறது என்று புள்ளி விவரங்கள் பல புலப்படுத்துகின்றன.
புன்னகையற்றவர்களால் நிச்சயம் பொன்னகைகளை சம்பாதிக்க முடியாது. இது வணிகத்திற்கு மட்டும் அல்ல, நமது அன்றாட வாழ்க்கைக்கும் கூட மிகச் சரியாகவே பொருந்தும். ஆம், எந்த ஒரு நேர்முகச்சந்திப்பு அறிமுகமும் அந்த ஒரு ஒற்றைப் புன்சிரிப்பில் தானே அடியெடுத்து வைக்கிறது.
‘நபிகள் நாயகம் அவர்கள் அதிகமதிகம் புன்முறுவல் பூப்பவர்களாக இருந்தார்கள்’ என்று அவர்களது வாழ்வியல் வரலாறு கூறுவதிலிருந்தே அவர்கள் தங்களது இறுதி 23 ஆண்டுகளுக்குள் லட்சக்கணக்கான தோழர்களை எப்படிப்பெற்றார்கள் என்று அறிய முடிகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது இப்புன்னகை வழியாகத்தான் தெரியும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?. இருவேறு கூறாக உடைந்து நொறுங்கிப் போன இருவேறு உள்ளங்களை உடனடியாக ஒன்றிணைப்பதற்கு ஒரே ஒரு ஒற்றைச் சிரிப்பு மட்டும் நமக்கு போதுமல்லவா?.
நமது இதயங்களைப் புண்படுத்தும் ‘புண்சிரிப்பு’ நமக்கு கூடாதே தவிர நமது இதயங்களை பண்டுத்தும் ‘புன்சிரிப்பு’ நமக்கு என்றைக்குமே மிகமிக அவசியமான ஒன்றுதான்.
இதனால் தான் ‘உன் நண்பனைச் சந்திக்கும் போது, நீ புன்முறுவல் பூப்பது ஒரு தர்மம்’ என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். ‘தர்மம் தலைகாக்கும்’ என்பது உண்மையானால், இந்தப் புன்னகையும் கூட நிச்சயம் உயிர்காக்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. தர்மம் அது ஒரு புன்னகையாகக் கூட இருக்கலாம் என்று எவ்வளவு எளிமைப்படுத்திச் சொல்லிச்சென்றிருக்கிறார்கள் நமது நபிகள் நாயகம் அவர்கள்.
ஆனால் இன்றைக்கு நம்மில் பலரிடம் அந்த புன்னகை தர்மம் இருக்கிறதா என்ன? அல்லது தர்மம் செய்யும் போதாவது ஒரு துளி புன்னகை அவர் முகத்தில் இருக்கிறதா என்ன?
இரண்டுமே இன்றைக்கு இல்லை என்பது தான் வருத்தத்திற்குரியது.
‘நீங்கள் தர்மம் செய்யும் போது சற்று புன்னகையுடன் தர்மம் செய்யுங்கள். இல்லையெனில், புன்னகையைக் கூட தர்மம் செய்யத் தயங்காதீர்கள்’ என்று நபிகளார் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது.
மனிதன் தன்னுடல் எங்கும் அணியும் தங்க, வெள்ளி நகைகளை விட அவன் தன் முகத்தில் அணியும் அந்த ஒரு புன்னகைக்கு அதிக ஆற்றலுண்டு. பொன்னகைக்கு மயங்காதவர்கள் கூட இந்தப் புன்னகைக்கு நிச்சயம் மயங்குவார்கள்.
சிரிப்பு கூட சில சமயம் பொய்த்துப் போய்விடலாம். ஆனால், இதழோரம் கசியும் அந்த ஒரு சிறுபுன்னகை என்றைக்கும் பொய்ப்பதே இல்லை. எனவே தான் நம் இறைத்தூதரின் இனிய வழியான இந்தப்புன்னகையை நீங்கள் விட்டு விடாது என்றென்றைக்கும் ஏற்று நடங்கள் என்கிறது மனித நேயம் போற்றும் புனித இஸ்லாம்.
இப்புன்னகை வழியாக இன்னொரு செய்தியையும் நபிகளார் நமக்கு உணர்த்திச் செல்கிறார்கள் இப்படி:
‘புன்னகை என்பது அதுவொரு அன்பின் வெளிப்பாடு, பாச உணர்வின் ஊற்று. இப்படிப்பட்ட இனிமையான இந்த நல்லுணர்வுகளை நாம் மிகச்சரியாக நமது ஆளுகையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். நல்லோர்களைக் கண்டால் மலர்ந்த முகத்துடன் புன்முறுவல் பூப்பதும், தீயோரைக் கண்டால் முகம் சுளிப்பதும் நமது உணர்வுகளை நாம் கட்டுப்பாட்டிற்குள் தான் வைத்திருக்கிறோம் என்பதற்கு நல்லடையாளம். அதை நாம் என்றும் இழந்து விடக்கூடாது. ஒரு மனிதனின் நல்லிலக்கணமும் அதுதானே!
வாருங்கள், புன்னகையை போற்றுவோம்!
வன்னகையை மாற்றுவோம்!
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு–3.
Related Tags :
Next Story