ஆன்மிகம்

மாற்றுத் திறனாளிகள் + "||" + disabilities people

மாற்றுத் திறனாளிகள்

மாற்றுத் திறனாளிகள்
இறைவன் எல்லோருக்கும் எல்லாச் சிறப்புகளையும், வளங்களையும் ஒரு சேர வழங்கி விடுவதில்லை.
அறிவு, அழகு, செல்வம், வீரம், திறமைகள், ஆற்றல்கள், உடல் உறுப்புகள் என எல்லாவற்றிலும் மனிதர்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. “ஒன்றிற் பெரியர் ஒன்றிற் சிறியர்” என்பதே உண்மை நிலை.

ஒரு காலத்தில் உடல் குறைபாடுகள் உள்ளவர்களை ‘ஊனமுற்றவர்கள்’ என்று அழைத்தனர். பின்னர் அவர்களுக்கு “சவால்களைச் சந்திப்பவர்கள்” என்று பெயரிட்டனர். இப்போது “மாற்றுத் திறனாளிகள்” என்ற பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளனர். ஒரு விஷயத்தில் அவர்களிடம் குறை இருக்கலாம்; ஆனால் இன்னொரு விஷயத்தில் அவர்கள் திறமை மிக்கவர் களாகக் காணப்படுகின்றனர். இன்னும் நம்மில் சிலர் மாற்றுத் திறனாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாமலேயே உள்ளனர். அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலும், ஒதுக்கி வைத்தும், அவர்களது தேவைகளுக்கு முன்னுரிமை தந்து நிறைவேற்றாமலும் கொடுமைப்படுத்துகின்றனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறித்த மக்கள் பார்வை மெல்ல மெல்ல மாறி வருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றுத் திறனாளிகளுடன் நடந்து கொண்ட விதம் குறித்து சில நிகழ்வுகளை நாம் பார்க்கலாம்.

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பனு வாகிப் என்ற இடத்தில் வசிக்கும் பார்வையுள்ள மனிதரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்” என்று தமது தோழரிடம் கூறினார்கள். ஆனால் அந்த மனிதரோ பார்வையற்றவராக இருந்தார். (நூல்: பைஹகி)

அவர் புறப்பார்வையில்லாத மனிதராக இருந்தாலும், அகப்பார்வை உடையவராக இருந்தார். எனவே அவரைக் கண்ணியப்படுத்தும் வகையில், அவரைப் ‘பார்வையுள்ளவர்’ என்று நபிகளார் குறிப்பிட்டார்கள். எனவே நாமும் குருடர், செவிடர், நொண்டி என்ற வார்த்தைகளினால் அழைத்து அவர்களைப் புண்படச் செய்யலாகாது.

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்ற கருத்துக்கு ஒப்ப நபிகள் நாயகம் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.

நபித்தோழர்களில் மிக உயர்வான இடத்தைப் பெற்றவர், இப்னு மசூத் (ரலி) என்பவர். அவர் குள்ளமானவராகவும், மெலிந்த கால்கள் உடையவராகவும் இருந்தார். ஒருமுறை அவர் பல் துலக்கும் குச்சியைப் பறிப்பதற்காக ஒரு மரத்தில் ஏறினார். அப்போது காற்று பலமாக வீசியதால், அவர் மரத்தில் இங்கும் அங்கும் ஆட வேண்டியதாயிற்று. அவரது மெல்லிய கால்களைக் கண்டு தோழர்கள் கேலியாகச் சிரித்தனர். நபிகள் நாயகம், தோழர்களை நோக்கி, “என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ, அந்த இறைவனின் மீது ஆணையாக! அந்த மெல்லிய கால்கள் இறைவனின் எடைத்தட்டில் உஹது மலையை விட கனம் பொருந்தியது” என்றார்கள். இப்னு மசூத் சிறந்த அறிஞராகவும், தூய்மையான வாழ்க்கை நடத்தியவராகவும் திகழ்ந்தார். எனவே தோற்றத்தை வைத்து ஒரு மனிதரை எடை போட வேண்டாம் என்பதே நபிகளார் தோழர்களுக்கு உணர்த்திய பாடம்.

மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளை மதித்து அவர்களது கோரிக்கைகளை ஏற்பதில் நபிகளார் கவனம் செலுத்தினார்கள். இத்பான்-பின்-மாலிக் என்ற நபித் தோழர், நபிகளாரிடம் முறையிட்டார். “இறைத்தூதரே! நான் பார்வைக் குறைவு உடையவன். நான் எனது பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்குத் தலைமை தாங்கி நடத்துகிறேன். மழை வந்து விட்டால் தண்ணீர் தேங்கி பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே எனது வீட்டிலேயே தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நீங்கள் என் வீட்டிற்கு வந்து தொழுகையை நடத்தினால், அந்த இடத்தை நான் தொழுகைக்குரிய இடமாக ஆக்கிக் கொள்ள முடியும்” என்றார். நபிகளார் அவரது கோரிக்கையை ஏற்று, நெருங்கிய தோழரான அபூபக்கருடன் அங்குச் சென்று தொழுகை நடத்தினார்கள். (நூல்: புகாரி)

ஜுலைபிப் என்ற நபித் தோழர், குள்ளமானவர், அழகற்றவர். மதீனா நகர மக்கள் அவரை ஒதுக்கி வைத்திருந்தனர். நபிகள் நாயகம் ஒரு குடும்பத்தாரை அணுகி அவருக்குப் பெண் கொடுக்கும்படி கோரினார்கள். பெற்றோர் மறுத்தார்கள். பெண்ணோ மணந்து கொள்ள தயாராக முன் வந்தார். ஒரு மாற்றுத் திறனாளிக்கு நல்ல மனைவியைப் பெற்றுத் தருவதை விட சிறந்த சேவை என்னவாக இருக்க முடியும்?

மாற்றுத் திறனாளிகளை நபிகளார் பதவிகளில் அமர்த்தினார்கள். உஹதுப் போர் நடைபெற்ற வேளையில் ஆயிரம் பேர் மதீனா நகரில் இருந்து வெளியேறி போருக்குச் சென்றனர். அப்போது மதீனாவில் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பைப் பார்வையற்ற இப்னு-உம்மு-மக்தூம் என்பவரிடம் ஒப்படைத்தார்கள்.

மாற்றுத் திறனாளிகளுடன் சமமாகப் பழகி, உறவாடுமாறு நபிகளார், தோழர்களைப் பணித்தார்கள். இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர், மதீனத்து மக்கள், பார்வையற்றவர்கள், நோயாளிகள் ஆகியோருடன் சேர்ந்து உணவருந்த மாட்டார்கள். நபிகள் நாயகம், “நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில், பார்வையற்றோர், நடக்க முடியாதவர்கள், நோயாளிகள் மீது எந்தவிதக் குற்றமுமில்லை” (24:61) என்ற திருமறை வசனத்தை ஓதிக் காட்டி மக்கள் கண்ணோட்டத்தை மாற்றி, அனைவரும் சேர்ந்து உணவு உண்ணும் நிலையை ஏற்படுத்தினார்கள்.

“துன்பத்தில் இருப்பவர்கள், தொழுநோயாளிகள் ஆகியோரை உறுத்துப் பார்க்க வேண்டாம்; ஏனெனில் உங்கள் பார்வை அவர் களைச் சோகத்தில் ஆழ்த்தி அவமான உணர்வை உண்டு பண்ணும்” என்றார்கள், நபிகள் நாயகம்.

மாற்றுத் திறனாளியாக பிறந்தது அவர்கள் குற்றமல்ல; இது எவருக்கும் நிகழலாம். எனவே அவர்கள் மீது அன்பு கொண்டு, சமமாக பாவித்து, வாய்ப்புகளை வழங்கி, எல்லோரையும் போல அவர்களையும் வாழச் செய்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் சேவையாகும்.

-டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்