ஆன்மிகம்

ஜோதிடத்தில் மருத்துவம் : ராசிகள் தரக்கூடிய நோய்கள் + "||" + Astrology Medicine: Diseases that are characterized by Zodiac

ஜோதிடத்தில் மருத்துவம் : ராசிகள் தரக்கூடிய நோய்கள்

ஜோதிடத்தில் மருத்துவம் : ராசிகள் தரக்கூடிய நோய்கள்
கடந்த வாரம் ஜோதிட ரீதியாக ராசிகளால் ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றி பார்த்தோம். அதில் கன்னி ராசி வரை சொல்லியிருந்தோம். மீதமுள்ள ராசிகளை தொடர்ந்து பார்க்கலாம்.
துலாம்

சுக்ரனை அதிபதியாக கொண்ட துலாம், ராசி மண்டலத்தில் ஏழாவது ராசியாக விளங்குகிறது. இதன் தோற்றம்... ஒரு ஆண் தராசு கையில் பிடித்தபடி இருப்பது போல் இருக்கக் கூடியவை. இந்த ராசி நமது உடலில், அடி வயிற்றுப் பகுதியில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோயாக பால்வினை நோய் உள்ளது. மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கண் பார்வைக் கோளாறு, மூலநோய், விஷக் காய்ச்சல், வாயுத்தொல்லை, கெட்ட பழக்கவழக்கத்தால் வரக்கூடிய தொற்று நோய்கள் போன்றவை அவ்வப்போது வந்து போகும்.

விருச்சிகம்

ராசி மண்டலத்தில் எட்டாவது ராசியாக விருச்சி கத்தின் அதிபதி செவ்வாய் கிரகம் ஆகும். இதன் தோற்றம் கருந்தேள் போல் இருக்கக் கூடியது. சூரியன் இந்த ராசிக்குள் நுழையும் மாதம் கார்த்திகை பிறக்கிறது. இந்த ராசி நமது உடலில் பிறப்பு உறுப்புக்களில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோய் வாயுத் தொல்லை. இது தவிர இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மஞ்சள் காமாலை, நரம்பு தளர்வு, மனக் கோளாறு, தோல் நோய், சளித்தொல்லை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்.

தனுசு

குரு பகவானை அதிபதியாகக் கொண்ட ராசி தனுசு. இது ராசி மண்டலத்தில் ஒன்பதாவது ராசியாக இருக்கிறது. இந்த ராசியின் தோற்றம்.. இடுப்புக்கு மேல் வில்லை பிடித்த ஆண் உருவம், இடுப்புக்கு கீழ் குதிரை வடிவம். சூரியன் மார்கழி மாதம் முழுவதும் இந்த ராசியில் இருப்பார். இந்த ராசி நமது உடலில் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களாகும். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு ஒவ்வாமை என்னும் அலர்ஜி, மூச்சுக் கோளாறு, செரிமான கோளாறு, புதிய தொற்று நோய்கள், சளித் தொல்லை இருக்கக்கூடும்.

மகரம்

ராசி மண்டலத்தில் பத்தாவது ராசியாக இருக்கும் மகர ராசியின் அதிபதி, சனி கிரகம் ஆகும். இதன் வடிவம் கடல் குதிரை போல் அமைந்திருக்கும். தை மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார். இந்த ராசி மனித உடலில் முழங்கால்களை ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்றே வரக்கூடிய நோய் மஜ்ஜை நோயாகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மன அழுத்தம், பித்த நீர் பையில் கோளாறு, சுவாசக் கோளாறு, கண் பார்வைக் கோளாறு, தோல் அரிப்புகள் வந்து போகும்.

கும்பம்

ராசி மண்டலத்தில் பதினோறாவது ராசியாக கும்ப ராசி. இந்த ராசியின் அதிபதியும் சனியே ஆவார். இந்த ராசியின் தோற்றம், ஆண் ஒருவர், குடத்தை வைத்திருப்பது போல் இருக்கும். சூரியன் இந்த ராசியில் மாசி மாதம் முழுவதும் தங்கிஇருப்பார். நமது உடலில் கணுக்கால்களை ஆதிக்கம் செய்யும் ராசி இது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் நரம்பு தளர்வு ஆகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் வரக்கூடும்.

மீனம்

ராசி மண்டலத்தில் கடைசி ராசியாகவும், பன்னிரண்டாவது ராசியாகவும் மீனம் உள்ளது. இதன் அதிபதி குரு பகவான். இரண்டு மீன்கள்... ஒரு மீன் வாலை மற்றொரு மீன் கவ்விக் கொண்டு இருப்பது போல தோற்றம் தரக்கூடியது. பங்குனி மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார். நமது உடலில் பாதத்தை இந்த ராசி அங்கமாக கொண்டு உள்ளது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். 12 ராசிகளுக்கும் வரக்கூடிய பொதுவான நோய்களான இவை அவரவர் ஜாதகத்தில் உள்ள விதிப்படியே நடக்கும்.

பொதுவாக ராசிகள் வரக்கூடிய நோய்கள் அனைத்தும் கிரகங்கள். திசா புத்தி கணக்குப்படி தான் வருகிறது. இந்த நோய் வர வேண்டும் என்று விதி இருந்தால் அது விடாது வந்தே தீரும். போவது போயே தீரும். இதனை மனதில் கொண்டு நாட்களை மகிழ்ச்சியோடு போக்க வேண்டும்.

- ஆர்.சூரிய நாராயணமூர்த்தி

பஞ்சபூத அடிப்படையில்..

இந்த உலகில் பஞ்ச பூத தத்துவ அடிப்படையில் தான் அனைத்து உயிர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. இவற்றில் ஒன்று இல்லையென்றாலும் உயிர்கள் வாழ முடியாது. அது போலத்தான் ஒவ்வொரு ராசியிலும் பஞ்ச பூதங்களான அக்னி, நிலம், காற்று, நீர் ஆகியவை ஆட்சி செய்கின்றன. இதில் ஆகாயம் மட்டும் இல்லை. ஏனெனில் வான்வெளியைக் கொண்டுதான் ஜோதிட சாஸ்திரம் இருப்பதால் அதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அக்னி தத்துவம்

மேஷம், சிம்மம், தனுசு ராசிகள் அக்னி தத்துவம் கொண்டவை. இந்த ராசிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் உடல் உஷ்ண தன்மை பெற்றவர்கள். மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, சிறுநீர் கல் அடைப்பு, மலச்சிக்கல், மூல நோய்கள் வரக்கூடும். இவர்கள் பெரும்பாலும் போதை பொருட்களை சாப்பிடக்கூடாது. அவ்வாறு போதைக்கு அடிமையானால் நரம்பு தளர்வு, பக்கவாதம், சர்க்கரை நோய் போன்றவை வரக்கூடும். இவர்கள் வாழ்வில் நல்ல ஒழுக்க நெறிமுறைகளுடன் வாழ்ந்தால், ஆரோக்கியமான உடல் பெற்று இருப்பார்கள்.

நிலம் தத்துவம்

ரிஷபம், கன்னி, மகரம் ராசிகள் நிலம் தத்துவம் கொண்டவை. இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும், பூமியில் இருக்கக்கூடிய ஜீவராசிகள் விலங்குகள், விஷப்பூச்சிகள் கடிப்பதால் மற்றும் ரசாயன பொருட்கள் மூலம் நோய்கள் உண்டாகும். ரத்த சோகை, தோல் வியாதிகள், மலட்டு தன்மை, இதயக்கோளாறு, கண் கோளாறு வரக்கூடும். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் பணிபுரியும் இடத்திலும், சுற்றுப்புறச்சூழல் தூய்மையாக இருந்தால் நோய்கள் அண்டாது. இவர்களுக்கு தொற்று நோய்கள் அடிக்கடி வரக்கூடும். எனவே புறத்தூய்மை தான் நோய் தடுக்கும் என்பதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காற்று (வாயு) தத்துவம்

மிதுனம், துலாம், கும்பம் ராசிகள் காற்று என்னும் வாயு தத்துவம் கொண்டவை. இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் வாயுத்தொல்லையால் அவதிப்படுவார்கள். உடலில் போதிய பலம் இருக்காது. ரத்த அழுத்தம், சுவாசக் கோளாறு, வயிறு பிரச்சினைகள் என்று இருக்கும். இவர்களுக்கு நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் தான் பணிபுரிய வேண்டும். உடல் உஷ்ணம் அடிக்கடி வந்து கண் எரிச்சல், முடி உதிர்வு, தலை வலி கொடுக்கும். இவர்கள் சாப்பிடும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உணவில் விஷத்தன்மை இவர்களுக்கு ஏற்றுக் கொள்ளாது. உடலுக்கு ஏற்ற உணவு தான் இவர்களது ஆரோக்கியம்.

ஜலராசி தத்துவம்

கடகம், விருச்சிகம், மீனம் ராசிகள் ஜல தத்துவம் அடிப்படையில் நீர் ராசிகள் ஆகும். இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு நீர் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் வரக்கூடும். இவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் மிகமிகக் குறைவு. நெஞ்சு எரிச்சல், சர்க்கரை நோய், நரம்பு தளர்வு, தோல் அரிப்பு, மூட்டு வலி வரக் கூடும். இவர்களுக்கு பிறப்பு உறுப்பு நோய், பால்வினை நோய்   வரவும் வாய்ப்புண்டு. இவர்கள் பெரும்பாலும் பதற்றம் அடையக்கூடாது. மன அழுத்தம், மன உளைச்சல் படவும் கூடாது. மனத்தூய்மை மூலம் தான் நோய்களை குறைக்க முடியும் என்பதை உணர வேண்டும்.