ஞானம் அளிக்கும் ஞானபதீஸ்வரர்


ஞானம் அளிக்கும் ஞானபதீஸ்வரர்
x
தினத்தந்தி 31 July 2018 10:00 AM GMT (Updated: 31 July 2018 10:00 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டம் பனையூர் பகுதியில் அமைந்துள்ளது ஞானபதீஸ்வரர் ஆலயம்.

பனையூர் ஆதி காலத்தில் ‘பனையூர் குளமங்கலம்’ என்றும், ‘பனசை நகர்’ என்றும், ‘தென்பனசை நகர்’ என்றும், ‘பனையூர் பிராந்தக சருப்பேதிமங்கலம்’ என்றும் பல பெயர்களைக் கொண்டு விளங்கியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஊர் மேலப் பனையூர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஊரின் வடகிழக்கில் சிவன் கோவிலும், அதன் எதிரில் ஊரணியும் அமைந்துள்ளது. இது பழங்காலத்திலேயே இவ்வூர் திட்டமிட்டு அமைக்கப்பெற்ற கிராமம் என்பதைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. பனையூரைச் சுற்றியுள்ள பாக்குளம், பனையக்குளத்தின் கீழ்க்கடைசி, மல்லியக்குடி ஏந்தல், வடக்கிக்கண்மாய் முதலிய இடங்களில் காணப்படுகின்ற பெருங்கற்கால மக்களின் பண்பாட்டுச் சின்னங்கள், பனையூரிலும் உள்ள கல்வெட்டுகள் இத்தலத்தின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக இருக்கின்றன.

பனையூரில் அமைந்த சிவன் கோவிலும், கோனாட்டு நாயகி அம்மன் என்ற பிடாரி அம்மன் ஆலயமும், அழகப்பெருமாள் என்ற மேலை வாசல் ஐயனார், பனையக்காட்டு ஐயனார் போன்ற கோவில்களும் இவ்வூருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கின்றன. என்றாலும், இங்குள்ள சிவன் கோவிலே அனைத்துக்கும் தலைமையானது, மிகவும் பழமை யானது. இந்த ஆலயம் பெரிய திருச்சுற்று மதிலையும், தென்புறத்தில் குடவரை வாசல் என்ற முகமண்டபத்தையும் கொண்டு அமைந்துள்ளது.

சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதி இரண்டும் கிழக்கு பார்த்த நிலையில் தனித்தனியாக அமைந்துள்ளன. பரிவாரத் தேவதைகளான மூலப் பிள்ளையார், சுப்பிரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர் முதலிய தெய்வங்களுக்கும் தனித்தனியான சன்னிதிகள் இருக்கின்றன. தட்சிணாமூர்த்தி கருவறையின் தென்புறத் தேவக்கோட்டத்தோடு இணைந்துள்ள சிறு மண்டபத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். கருவறையின் மேற்கு, வடக்கு தேவகோட்டங்களில் தெய்வ உருவங்கள் இல்லை. வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணியர், சனீஸ்வரர் ஆகியோரும் தனித் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.



இத்தல இறைவனின் சன்னிதியானது, நீண்ட கருவறைப் பெற்று விளங்குகிறது. அதையடுத்து அர்த்தமண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை உள்ளது. இக்கோவிலில் பல்வேறு இடங்களில் சுமார் 60 கல்வெட்டுகள் காணப் படுகின்றது.

இங்குள்ள இறைவனின் பெயர் ஞானபதீஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. ஆனால் முன்காலத்தில் இறைவனுக்கு அறிவீசுரமுடையார் என்றும், அம்பாளுக்கு அகிலமீன்ற நாச்சியார் என்றும் திருநாமங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஒரு முறை ஆலயத்தில் இருந்த அம்மனின் சிலையில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிலையை அகற்றி விட்டு புதிய சிலை வைக்க ஊர் மக்கள் முடிவு செய்தனர். ஊர் மக்களின் வேண்டுகோள்படி, புதுக்கோட்டை மன்னர் புதிய சிலையை அமைக்க ஏற்பாடு செய்து வந்த நேரத்தில், மன்னனின் கனவில் அம்பாள் தோன்றினாள். ‘எனக்கு என்ன குறை? எதற்காக என்னை வெளியில் தூக்கி போடச் சொல்லிவிட்டாய்? உன் பிள்ளைக்கு ஏதாவது ஊனம் வந்தால் உன் பிள்ளையை வெளியில் தூக்கிப் போட்டுவிடுவாயா?’ என்று கேட்டாளாம். இதை யடுத்து புதிய சிலையை பிரதிஷ்டை செய்தாலும், பழைய சிலையை ஆலயத்தை விட்டு அகற்றாமல், ஆலயத்தின் முன் மண்டபத்தில் வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.

இக்கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுபோல நோய்கள் நெருங்காது என்பது ஐதீகம். இங்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவே முக்கியமான திருநாளாகும். திருவாதிரை திரு நாளுக்கு காப்பு கட்டி 10 நாட்கள் திருவிழா நடத்தப்படுகிறது. காப்பு கட்டிய நாள் முதல் 8 நாட்கள் இரவு, பகல் மாணிக்கவாசகர் புறப்பாடும், 9-ம் திருவிழாவுக்கு பஞ்சமூர்த்திகள் உலாவும், 10-ம் நாளன்று நட ராஜர்- சிவகாமி அம்மன் உலாவும் நடைபெறும்.

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் பனையப்பட்டி என்ற ஊர் உள்ளது. அங்கு இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம். பனையப்பட்டியில் இருந்து ஆட்டோ வசதியும் உண்டு.

- புதுகை பொ.ஜெயச்சந்திரன்

Next Story