ராமநாதபுரத்தில் கந்தசஷ்டி விழா தொடக்கம்


ராமநாதபுரத்தில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 6:32 PM GMT)

ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோவிலில் 51-வது ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று காலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து வழிவிடு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் இரவு 8 மணிக்கு சண்முகர் அர்ச்சனை நடைபெற்றது.

விழாவையொட்டி தினமும் ஆன்மிக சொற்பொழிவு, பாராயணம், இசை சொற்பொழிவு, வாரவழிபாடு போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து 14-ந்தேதி காலை 11 மணிக்கு மேல் வழிவிடு முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கணேசன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இதேபோல ராமநாதபுரம் அருகே உள்ள பெருவயல் கிராமத்தில் அமைந்துள்ள ரணபலி முருகன் கோவிலில் நேற்று மாலை 5 மணியளவில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை போன்றவை நடைபெற்றது. 13-ந்தேதி மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 14-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி பிரம்ம கிருஷ்ண ராஜேசுவரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story