வெளிநாடு செல்லும் யோகம்


வெளிநாடு செல்லும் யோகம்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:31 AM GMT (Updated: 9 Dec 2018 11:31 AM GMT)

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது பழமைச் சொல். வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவது என்பது, தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

தற்கால இளைஞர்களில் பெரும்பாலானோரின் லட்சியம், கனவாக இருப்பது, ‘வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும்’ என்பது தான். விமானம் ஏறி வெளிநாட்டு காற்றை சுவாசித்து, அங்குள்ள பகுதிகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பலருக்கு. இன்னும் சிலருக்கு வெளிநாட்டில் வணிகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்.

ஆனால் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் நிறைவேறி விடுவதில்லை. ஒரு சிலருக்கு எதிர்பார்க்காமல் அந்த வாய்ப்பு வந்து கதவை தட்டும். பலருக்கு பல முறை முயன்றும் எட்டா கனியாக இருக்கும்.

இது போன்ற ஆசைகளை நிறைவு செய்யும் யோகம் ஜாதகத்தில் இருக்கிறதா? என்பதை அறியும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும்.

மனித வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வு களையும் பாக்கிய ஸ்தானம் எனும் 9-ம் இடமே நிகழ்த்துகிறது. இதை பேச்சு வழக்கில் ‘வாங்கி வந்த வரம்’ என்பார்கள். அதையே ஜோதிட மொழியில் சொல்வதென்றால் ‘பிராப்தம்’ என்று கூறுவார்கள்.

வெளிநாடு போக முடியுமா? என்ற கேள்விக்கு ஜோதிட ரீதியான விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

நாம் இருக்கும் வீட்டையும் நாட்டையும் குறிப்பது, நம்முடைய ஜாதகத்தின் 4-ம் இடம் தான். அந்த வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடான 3-ம் இடம் தான் இடப்பெயர்ச்சியை குறிக்கிறது. நீண்ட தூரப் பயணத்தைப் பற்றி சொல்வது ஒன்பதாம் இடம் ஆகும். அதன் அடிப் படையில் 3, 9, 12 ஆகிய இடத்தைக் குறிக்கின்ற கிரகங்களின் திசாபுத்தியையும், அதன் காலத்தையும் வைத்து தான் ஒருவர் வெளிநாடு போக முடியும்.

பயணம், இடப்பெயர்ச்சி அல்லது இடமாற்றம் போன்றவற்றைப் பற்றி குறிப்பிடுவது நீர் கிரகமான சந்திரன் ஆகும். ஒரு வகைக்கு சந்திரனைப் போலவே, சுக்ரனையும் நீர் கிரகமாக எடுத்துக் கொள்ளலாம். வெளிநாட்ட வரையும், வேறு மொழி பேசுபவரையும், வேறு மதத்தவர்களையும் குறிக்கும் கிரகங்கள் ராகுவும், கேதுவும். அதே போல் ஜீவனகாரகன் குரு, கர்மகாரகன் சனி. இவர் அனைவரும் தான் வெளிநாட்டு பயணத்தை முடிவு செய்யும் கிரகங்களாக பார்க்கப்படு கிறார்கள்.

அதே போல் ஒருவரது ஜாதகத்தில் 9, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதிகள் இணைவு பெற்றிருந்தாலோ அல்லது பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தாலோ, அந்த நபர் வெளிநாடு செல்வார். ஒருவர் வெளிநாடு செல்வதற்கு இந்த ஜாதக அமைப்பும் வேண்டும்.

அதே போல் ஒருவர் பிறந்த இடத்தை விட்டு, இடம் பெயர்ந்து செல்ல வேண்டுமானால், அவரது ஜாதகத்தில் சந்திரன், குரு அல்லது சனியுடன் இணைந்திருக்க வேண்டும். இந்த அமைப்போடு, ராகு- கேது இணைவு பெற்றிருக்கும் போது வெளிநாட்டு யோகம் 100 சத வீதம் நிச்சயமானதாக அமையும்.

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு, 9 அல்லது 12-ம் இடத்திற்கான அதிபதிகள், நீர் தத்துவ ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் நின்றால், அந்த ஜாதகர் நிச்சயம் கடல் கடந்து வெளிநாடு செல்வார் என்பதை தெரிவிக்கும் அமைப்பாகும்.

நீர் தத்துவ ராசிகளில் 9-ம் இடத்தின் அதிபதியும், 10-ம் இடத்தின் அதிபதியும் இணைந்திருந்தால் அந்த நபருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். குறிப்பாக நீர் தத்துவ ராசியில் 9-ம் அதிபதி இருக்கும் போது, அவரோடு சனியும் கூடியிருந்தால் வெளிநாட்டு வேலை நிச்சயம்.

5-ம் இடத்திற்கான அதிபதி, 12-ம் வீட்டில் இருந்தால், அந்த ஜாதகர் கல்லூரி படிப்பிற்காக வெளிநாடு செல்வார். 9-ம் இடத்துக்கான அதிபதி, 12-ம் வீட்டில் இருந்தால், அந்த நபர் முதுநிலை ஆராய்ச்சி மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லக்கூடும். ஒருவரது ராசிக்கு 7-ம் இடம் சர ராசியாக இருந்து, அதில் செவ்வாய் மற்றும் சனி இணைந்து நின்றால், அந்த ஜாதகர் வெளிநாட்டிலேயே தங்கும் வாய்ப்பைப் பெறுவார். பிறந்த மண்ணிற்கு திரும்பி வரமாட்டார்.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவற்றுக்கு 9-ம் வீடு சர ராசி ஆகும். 12-ம் வீடு ஜல ராசி. 9, 12 வீட்டின் அதிபதியுடன் சந்திரன் அல்லது குரு அல்லது சனி சம்பந்தம் பெற்றால் வெளிநாடு வாய்ப்பு அதிகம்.

6, 8, 12 ஆகிய வீட்டின் அதிபதிகளுடன் சந்திரன் அல்லது 10-ம் வீட்டின் அதிபதி இணைந்திருந்தால், அந்த ஜாதகர் 6, 8, 12 ஆகிய ராசி அதிபதிகளின் தசாபுத்தி காலத்தில் வெளிநாட்டில் பொருள் ஈட்டி, நல்ல நிலையில் சொந்த ஊர் திரும்புவார்கள்.

12-ம் வீட்டின் அதிபதி 7-ம் வீட்டில் இருந்தால், அந்த நபருக்கு வெளிநாட்டில் திரு மணம் நடைபெறும். அவர் வெளிநாட்டவரை மணப்பார் அல்லது வெளிநாட்டு குடியுரிமை பெற்றவரை மணப்பார்.

காலசர்ப்ப நிலையில் அனைத்து கிரகங்கள் இருந்தாலும், வெளிநாட்டு யோகம் உண்டு. அதாவது 2-ல் ராகு, 8-ல் கேது நின்று, அந்த கிரகங்களுக்கு இடையே அனைத்து கிரகங்களும் இருந்தால் இந்த யோகம் வாய்க்கும்.

6-ம் இடத்திற்கான அதிபதி 12-ம் வீட்டில் இருந்து, 10-ம் வீட்டின் அதிபதியுடன் இணைந்திருந்தால், அந்த நபர் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் தொடர்பாக வெளிநாடு சென்று வருவார்.

வெளிநாடு செல்வதற்காக மேலே குறிப்பிட்ட அமைப்புகள் இருந்தும், அந்த நபரின் ஜாதகத்தில் 8-ம் வீட்டு அதிபதி 7-ம் இடத்திலோ அல்லது 6-ம் வீட்டின் அதிபதி 7-ம் வீட்டிலோ நின்றால், அவர் வெளிநாடு சென்று சிரமங்களைச் சந்திப்பார். குறிப்பாக வெளிநாடு சென்றவுடன் வேலை பறிபோகலாம். அங்கு நிரந்தர வேலையின்றி தவிக்கலாம். இந்த காலகட்டத்தில் 8-ம் அதி பதியின் தசாபுத்தி நடந்தால் அவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்புவது சிரமமான காரியமாகும்.

ராகு- கேது கிரகங்கள் இருப்பது போல், ஒரு புறம் சனியும், மறுபுறம் குருவும் இருந்தால் அந்த நபர் வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படும்.

மேலே கூறிய அமைப்புகள் இருந்தும் ஒருவர் வெளிநாடு செல்வதில் தடை இருந்தால், அந்த நபரின் ஜாதகத்தில் 9, 12-ம் இடத்தின் அதிபதிகள் இருக்கும் இடத்தில் ராகு-கேது அல்லது வக்ர கிரகம் இருக்கும். வக்ர கிரகங்கள் ஒருவரது பயணப் பாதையை ஏற்படுத்தும் கிரகத்தின் இயக்கத்தை தடை செய்யும். இதற்கு பரிகாரமாக ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான ராகு காலத்தில், ஊரின் வடக்கு பக்கமாக உள்ள புற்றினை வழிபட வேண்டும். அல்லது தன்னுடைய இடையில் நாகத்தை சூடியிருக்கும் விநாயகப் பெருமானை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்தால் தடை விலகும்.

- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி, சேலம்.

Next Story