மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமர்ந்த மகாலட்சுமி
சிவபெருமானின் சொல்லையும் மீறி, தட்சனின் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயிணி.
திருச்சி மாவட்டம் வெள்ளூர் என்ற ஊரில் உள்ளது, திருகாமேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ‘திருகாமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘சிவகாமசுந்தரி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
மன்மதன் பற்றிய புராணக் கதை ஒன்று இத்தலத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.
சிவபெருமானின் சொல்லையும் மீறி, தட்சனின் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயிணி. அங்கு அவளுக்கு அவமானமே மிஞ்சியது. தன் சொல் கேட்காத அன்னைக்கு, ஈசன் சாபம் அளித்தார். அதன்படி பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து, உரிய நேரம் வரும்போது கயிலை வந்து சேரும்படி அருளினார். இதையடுத்து பார்வதி என்ற பெயருடன், பர்வதராஜனிடம் வளர்ந்து வந்த தேவியானவள், கயிலாயமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை நோக்கி தவம் புரியத் தொடங்கினாள்.
பார்வதியைப் பிரிந்த சிவபெருமான் கயிலையில் அசைவற்ற நிலையில் இருந்தார். இதனால் பிரபஞ்சத்திலும் ஓர் அணுவும் அசையவில்லை. இதே நிலை தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என்று அஞ்சிய பிரம்மாவும், விஷ்ணுவும் தேவர்கள் சூழ, சிவபெருமானையும் பார்வதியையும் ஒன்றிணைக்க முயன்றனர். மன்மதனை அழைத்து சிவபெருமான் மீது, காமபாணத்தை ஏவுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆனால் ஈசனின் மீது பாணம் தொடுக்க மன்மதன் தயங்கினான். உடனே தேவர்கள், “நீ ஈசன் மேல் காம பாணம் தொடுக்காவிட்டால், உனக்கு நாங்கள் சாபம் அளிப்போம்” என்று மிரட்டினர். இதனால் பயந்து போன மன்மதன், ஒரு புன்னை மர நிழலில் ஒளிந்து கொண்டு ஈசனின் மீது அம்பு விட்டான்.
அவன் விட்ட அம்பு, வில்லில் இருந்து வெளியேறும் முன்பாகவே, அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தார் சிவபெருமான். அதோடு மன்மதன் விட்ட பாணமும் திசைமாறி, பார்வதியின் மீது பட்டது. அதில் அவர் பருவம் செய்தி, சிவபெருமானை வந்தடைந்தாள். அன்னைக்கு சிவகாம சுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. இந்த பெயர் கொண்டவரே இத்தல இறைவியாக திகழ்கிறார். இறைவனின் திருநாமமும் அதனாலேயே ‘காமேஸ்வரர்’ என்றானது.
இந்த நிலையில் கணவனை இழந்த ரதிதேவி, தன் கணவரான மன்மதனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். அவளுக்கு மனம் இரங்கிய இறைவன், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று அருள் புரிந்தார். ரதியும், மன்மதனும் இத்தலமான வெள்ளூர் வந்து மன்மதனுக்கு பழைய உடலைத் தர வேண்டுமென சிவபெருமானை வழிபட, ஈசனும் மனம் இரங்கி மன்மதனுக்கு உடலைத் தந்தார் என்று தல புராணம் சொல்கிறது.
இந்த திருத்தலத்தில் உள்ள இறைவனானவர், மகாலட்சுமியால் வழிபடப்பட்டவர் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர் களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய சிவபெருமான், அவளை மோகிக்க அவர்களுக்கு ஐயப்பன் பிறந்தார்.
இதை அறிந்த மகாலட்சுமி, தன் கணவரான மகாவிஷ்ணுவின் மீது கோபம் கொண்டாள். பின்னர் வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய சேத்திரம் எனும் வெள்ளூரில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள். பல யுகங்களாக தவம் செய்தும் அவளுக்கு, சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே, மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக் கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வ இலையை மழையாக பொழிந்து பூஜித்தாள்.
இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், மகாலட்சுமியின் முன்பாகத் தோன்றி, ஐயப்பனின் அவதார நோக்கத்தை விளக்கி, அவளை சாந்தப்படுத்தினார். பின்னர் அவளை, ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக செய்து, மகாவிஷ்ணுவின் இதயத்தில் இருக்கும்படிச் செய்தார். மேலும் மகாலட்சுமியை ஐஸ்வரியத்தின் அதிபதியாகவும் இருக்கும்படி அருள்புரிந்தார்.
இதன் காரணமாக இந்த ஆலயத்தில் இருக்கும் மகாலட்சுமி, ‘ஐஸ்வரிய மகாலட்சுமி’ என்ற திரு நாமத்துடனேயே பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ராவணனுக்கு, இத்தல இறைவன் மீண்டும் உடல் வலிமை கொடுத்து, ஈஸ்வர பட்டம் சூட்டியதாக தல புராணம் சொல்கிறது. இத்தலத்தில்தான் சுக்ரன் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியானார். குபேரன் இத்தல இறைவனை வழிபட்டு தனாதிபதியாக மாறினார். வெள்ளிக்கிழமையில் வரும் சுக்ர ஓரையில் (காலை 6-7 மணி), ஐஸ்வரிய மகாலட்சுமிக்கு 16 வகையான அபிஷேகம் செய்து, 16 நெய் தீபங்கள் ஏற்றி, 16 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால், 16 வகை பேறு களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.
சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம். கி.பி. 6-ம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றிருப்பதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வளமாக வாழ, நாமும் ஒரு முறை ஐஸ்வரிய மகாலட்சுமியை தரிசித்து வரலாமே!
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளூர் திருத்தலம் உள்ளது. முசிறியில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதிகள் இருக்கின்றன.
மல்லிகா சுந்தர்
Related Tags :
Next Story