கொடுத்த வாக்கை காப்பாற்றுவது


கொடுத்த வாக்கை காப்பாற்றுவது
x
தினத்தந்தி 21 May 2019 9:27 AM GMT (Updated: 2019-05-21T14:57:01+05:30)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது

இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘கொடுத்த வாக்கை காப்பாற்றுவது’ குறித்த தகவல்களை காண்போம்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி. இறை நம்பிக்கையாளர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார்கள். இதுதான் அவர்களின் இயற்கையான பண்பு. இந்த பண்பு குறித்து இறைவன் திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் பெருமிதத்துடன் கூறி வருகிறான்.

‘இறை நம்பிக்கையாளர்கள் தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் பேணுவார்கள்’. (திருக்குர்ஆன் 23:8)

வாக்குறுதியை நிறைவேற்றுவது இறை நம்பிக்கையுடனும், இஸ்லாமிய மார்க்கத்துடனும் தொடர்புடையது. அதை ஒரு முஸ்லிம் நிறைவேற்றாமல் போகும் போது அவரிடமிருந்து உண்மையான இறை நம்பிக்கையும், உணர்வுப்பூர்வமான மார்க்கப்பற்றும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய சிந்தனையைத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

‘எவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் தன்மை இல்லையோ அவரிடம் இறை நம்பிக்கை இல்லை. எவரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் தன்மை இல்லையோ அவரிடம் இஸ்லாம் மார்க்கம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது)

வாக்குறுதியை காப்பாற்றுவது புகழுக்குரிய பண்பு. அது இறைவனின் ஒப்பற்ற பண்பாகவும், நபிமார்களின் மாசற்ற பண்பாகவும், உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் உயர்ந்த பண்பாகவும் அமைந்துள்ளது.

‘யார் தம் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்காக கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை. (திருக்குர்ஆன் 39:20)

இஸ்மாயீல் (அலை) அவர்களின் நற்பண்புகள் குறித்து இறைவன் பேசுகையில் ‘அவர் வாக்கை காப்பாற்றுபவர்’ என்றும் குறிப்பிடுகின்றான்.

‘(நபியே) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக. திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்’. (திருக்குர்ஆன் 19:54)

‘ஒரு வாக்கிற்காக மூன்று நாட்கள் காத்திருந்த காருண்ய நபி’

அப்துல்லாஹ் பின் அபூஹம்ஸா கூறுகிறார்:

‘நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பு நான் அவர்களிடம் ஒரு வியாபாரம் செய்தேன். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை சிறிது இருந்தது. ‘இங்கே நில்லுங்கள், நான் அதை கொண்டு வந்து தருகிறேன்’ என்றேன். நானும் மறந்து போய்விட்டேன். மூன்று நாட்கள் கழித்து ஞாபகம் வந்ததும் அங்கே சென்றேன். அதே இடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். என்னைப் பார்த்த நபியவர்கள், ‘இளைஞனே, நீ எனக்கு சிரமம் தந்து விட்டாய். நான் உன்னை எதிர்பார்த்து இங்கேயே மூன்று நாட்கள் காத்திருக்கிறேன்’ என்றார்கள். (நூல்: அபூதாவூத்)

வாக்கு கொடுத்தவர் மறந்து போய்விட்டார். ஆனால் தான் கொடுத்த வாக்கை நபி (ஸல்) அவர்கள் காப்பாற்றிவிட்டார்கள்.

அறியாமைக் காலத்தில் கஅபா ஆலயத்தை பராமரிக்கும் பொறுப்பு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுடைய குடும்பத்தினரிடம் இருந்தது. அதன் சாவியும் அவர் வசமே இருந்தது. ஆரம்பத்தில் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் தம்மை கஅபாவின் உள்ளே அனுமதிக்குமாறு எவ்வளவோ வேண்டியும் அவர் அனுமதிக்கவில்லை.

உடனே நபி (ஸல்) அவர்கள் ‘உஸ்மானே, ஒரு நாள் அதன் சாவி எனது கையில் வரும். அதை நான் உமக்குத் தருவேன்’ என்று வாக்களித்தார்கள்.

ஹிஜ்ரி 8-ம் ஆண்டு புனித கஅபா வெற்றி கொள்ளப்பட்டது. உஸ்மான்பின் தல்ஹா (ரலி) வசம் இருந்த சாவியைக் கொண்டுவரச் சொன்ன நபிகளார் கஅபாவைத் திறந்து, உள்ளே சென்று தொழுதுவிட்டு வந்தார்கள்.

அப்போது அலி (ரலி), அப்பாஸ் (ரலி) ஆகியோர் கஅபாவின் திறவுகோலுடன் நபியைச் சந்தித்து ‘இறைத்தூதரே, ஹாஜிகளுக்கு நீர் புகட்டும் பணியுரிமை, கதவு திறக்கும் உரிமை ஆகியவற்றை எங்களுக்குத் தாருங்கள்’ என வேண்டினர்.

‘உஸ்மான் பின் தல்ஹா எங்கே?’ என்று வினவிய நபியவர்கள் அவர் வந்த பின் அவரிடமே கஅபாவின் திறவுகோலை ஒப்படைத்து, ‘இது என்றைக்கும் உங்கள் குடும்பத்தார் வசமே இருக்கும். அக்கிரமக்காரனைத் தவிர வேறு எவனும் அதை பறிக்க மாட்டான். இந்த ஆலயத்திற்கு இறைவன் உங்களைக் காப்பாளராக ஆக்கியுள்ளான்’ என்றார்கள்.

உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு கொடுத்த வாக்கை நபியவர்கள் காப்பாற்றினார்கள். நபியின் வாக்குறுதி அடிப்படையில் இதுநாள் வரை, உலகம் அழியும் வரை அவரின் குடும்பத்தார் வசமே கஅபாவின் திறவுகோல் இருக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி நடக்கும், முஸ்லிம்களும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதி என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. அது மன உறுதியின் வெளிப்பாடு. அது உள்ளத்திலிருந்து வெளிப்பட வேண்டும். உதட்டின் அளவில் மட்டும் இருந்தால் போதாது.

‘வாக்குறுதி என்பது ஒருவகையில் கடனைப் போன்றது. கொடுத்த வாக்குக்கு மாறு செய்பவன் மீது நாசம் உண்டாகட்டும், நாசம் உண்டாகட்டும், நாசம் உண்டாகட்டும்’ என அலி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவது போன்று, கொடுத்த வாக்குறுதியையும் திரும்ப நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

வாக்களித்த பிறகு, சக்தியிருந்தும் கொடுத்த வாக்கை ஒருவன் நிறைவேற்றாவிட்டால், அல்லது இதை பொருட்படுத்தாவிட்டால், அல்லது பொய்யாக வாக்களித்தால் அவன் நயவஞ்சகன் மற்றும் பாவி ஆகியோர் பட்டியலில் சேர்ந்து விடுகின்றான். இந்த நிலை குறித்து நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கும் போது...

‘நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. 1) அவன் பேசினால் பொய் பேசுவான், 2) அவன் வாக்களித்தால் மாறு செய்வான், 3) அவனை நம்பினால் அவன் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

நல்லது செய்ய நினைப்பவர்கள் புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. குறைந்தபட்சம் கொடுத்த வாக்கை காப்பாற்றினாலே போதும். இதுபற்றி திருக்குர்ஆன் கூறுவதை பார்ப்போம்...

‘உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுபவர்களே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்’ (திருக்குர்ஆன் 2:177).

‘அவர்கள் இறைவனின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள். உடன்படிக்கையை முறிக்கமாட்டார்கள்.’ (திருக்குர்ஆன் 13:20)

‘யார் இறைவனிடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ, அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.’ (திருக்குர்ஆன் 48:10)

மக்களிடம் கொடுக்கப்படும் வாக்குறுதி இறைவனிடம் கொடுக்கப்பட்டது போன்றதாகும். ‘உடன்படிக்கையை அழகிய முறையில் நிறைவேற்றுவதும் இறைநம்பிக்கையில் அடங்கும்’. (நபிமொழி)

ஒருவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றாது இறந்துபோனால், அவரின் வாரிசுதாரர் அதை நிறைவேற்றுவது, அவர் அவருக்குச் செய்யும் பேருதவியாகும். இது குறித்தும் ஒரு நபிமொழி வருகிறது.

‘ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து ‘இறைத்தூதரே, எனது தாயும், தந்தையும் இறந்துவிட்டனர். இருவரின் இறப்புக்குப்பிறகும் அவர்களுக்காக நான் நன்மை ஏதும் செய்வது மிச்சம் உள்ளதா?’ என கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம், அவ்விருவருக்காகவும் பிரார்த்திப்பது, பாவமன்னிப்பு வேண்டுவது, அவர்கள் கொடுத்த வாக்கை அவர்களுக்குப் பிறகு நிறைவேற்றுவது, அவர்களின் உறவினர்களுடன் உறவாடுவது, அவர்களின் நண்பர்களை சங்கையாக நடத்துவது உள்ளது’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர் : அபூஉஸைத்மாலிக்பின் ரபிஆ அஸ்ஸாதி, நூல்: அபூதாவூத்)


Next Story