ஆன்மிகம்

நினைத்ததை நிறைவேற்றும் கந்தர்மலை முருகன் + "||" + Kandarmalai Murugan fulfills what thought

நினைத்ததை நிறைவேற்றும் கந்தர்மலை முருகன்

நினைத்ததை நிறைவேற்றும் கந்தர்மலை முருகன்
இந்த உலகத்தில் எத்தனையோ முருகன் திருத்தலங்கள் மக்களுக்காக அருளாசி வழங்கி வருகின்றன. அவற்றுள் நமக்கு தெரியாமல் எத்தனையோ அதிசயங்களும், அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் முருகன் தலங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப் பட்ட முருகன் ஆலயங்களில் ஒன்றுதான் ‘கந்தர்மலை.’
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் அமைந்துள்ளது, கந்தர்மலை என்ற முருகன் கோவில். இந்த மலையின் மீது சித்தர்கள் வாழ்ந்து வருவதாக இன்றளவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏறத்தாழ 750 அடி உயரத்தில் அமைந்துள்ள கந்தர் மலை முருகனை தரிசிக்க, 250 படிகள் ஏறிச்செல்ல வேண்டும்.

சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக, மலை மீது உள்ள குகைக்குள், அதிகமான ருத்ராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன. இங்கு ‘வள்ளி குளம்’ என்று ஒரு குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் மேல் சூரிய ஒளி, சந்திர ஒளி படுவதில்லை. இந்த குளத்து நீரை எடுத்து பருகினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்பதும், பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.

இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது. ஒரு முறை கானகத்தில் முருகனோடு இருந்த வள்ளியம்மைக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டது. அதை நிறுத்த ஏதாவது வழி சொல்லும்படி வள்ளியம்மை, முருகப்பெருமானிடம் வேண்டினாள்.

உடனே முருகப்பெருமான் “எந்தக் குளத்தில் சூரிய ஒளியும், சந்திர ஒளியும் படவில்லையோ, அந்த குளத்தில் இருந்து நீர் எடுத்து பருகினால் விக்கல் நின்றுவிடும்” என்று கூறினார்.

இதையடுத்து வள்ளியம்மை இந்த கந்தர் மலை குளத்தில் நீர் எடுத்து பருகியதும், விக்கல் நின்று விட்டதாக செவி வழிக் கதை ஒன்றை சொல்கிறார்கள்.

வள்ளியின் தாகம் தீர்த்த மலைக்குகையில் அற்புத சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள். அரிய வகை நாகங்களும் இங்கே அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள். இன்றளவும் சித்தர்களும், நாகங்களும் அரூபமாக இங்கே நடமாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த குகைக் குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் விலகி ஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றுவார் ‘கந்தர்மலை வேல்முருகன்’ என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் கந்தப்பெருமான், இந்த கந்தர் மலையில் அருளும் ஆசியும் வழங்கி வருகிறார். இந்த திருத்தலத்தில் பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை, வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து முருகப்பெருமானுக்குரிய விழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. பங்குனி உத்திர விழாவின்போது நடக்கும் வள்ளி - தெய்வானை திருக்கல்யாண விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள், கந்தர்மலையில் நடக்கிறது. கந்தர்மலை வேல்முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

அமைவிடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுண்டக்காய்பட்டி என்ற ஊர். காவேரிப்பட்டினத்தில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன.

- அறந்தாங்கி சங்கர்