ஆன்மிகம்

மன நிம்மதி தரும் வாழ்க்கை எது? + "||" + Peace of Mind What gives life?

மன நிம்மதி தரும் வாழ்க்கை எது?

மன நிம்மதி தரும் வாழ்க்கை எது?
மகிழ்ச்சியும் மனநிறைவும் மிக்க வாழ்வு குறித்தே ஒவ்வொரு மனிதனும் கனவு காணுகின்றான். அதனைச் செயல்வடிவில் கொண்டுவருவதற்காக ‘எலி ஓட்டம்’ ஓடுகின்றான்.
செல்வம், அதிகாரம், அறிவு இவைதான் மகிழ்ச்சியான வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகள் என்று தவறாகப் புரிந்து வைத்துள்ளோம். மகிழ்ச்சியைத் தேடி செல்வத்திற்குப் பின்னால் ஓடி, மிச்சம் மீதி இருக்கும் கொஞ்சநஞ்ச மகிழ்ச்சியையும் தொலைத்தவர்கள் ஏராளம்.

அதிகார அரியணைகளைக் கைப்பற்றி உலகையே அடக்கி ஆண்ட பலரும் தனிப்பட்ட வாழ்வில் நிம்மதியைத் தொலைத்தவர் களாகவே இருந்துள்ளனர். ‘பிரபலம்’ எனும் கொடிக்கம்பத்தில் ஏறிய பலரும் வாழ்வில் நிராசையடைந்தவர்களாகவே இருந்துள்ளனர்.

‘நிம்மதியான வாழ்வு’ என்பது பஞ்சு மெத்தையிலும், பட்டு விரிப்பிலும் கிடைப்பதல்ல. அரண்மனை போன்ற வீடும், வானுயர்ந்த கட்டிடங்களும் சாந்திமிக்க வாழ்வின் உறைவிடமாக ஒருபோதும் அமையாது. ருசிகரமான உணவுப் பதார்த்தங்கள் யதார்த்த வாழ்வில் ஏற்படும் வெறுமையை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.

உயர் பதவிகளும் பெரும் பொறுப்புகளும் நிம்மதி நிறைந்த வாழ்வை பரிசாக வழங்காது. அறிவு இருப்பதன் காரணத்தால் மட்டும் வாழ்வு மகிழ்ச்சிகரமாக ஒருபோதும் மாறாது.

வாழ்க்கை என்றால் என்ன?

‘சப்தமும் கோபமும் நிறைந்த பொருளற்ற முட்டாள்தனமான கதைதான் வாழ்வு’ என்று ஷேக்ஸ்பியருடைய காதாபாத்திரம் மாக்பத் கூறுவதைப் போன்று, வாழ்வு என்பது அர்த்தமற்ற ஒன்றல்ல. மனிதன் வெறுமனே வாழ்ந்து மடிவதற்காகப் படைக்கப்பட்டவனுமல்ல. உண்டு, குடித்து, ரசித்து, ருசித்து கடந்துசெல்ல வேண்டியதல்ல வாழ்க்கை.

மாறாக வாழ்வு என்பது கடமைகளும், உரிமைகளும், கொள்வினை கொடுப்பினைகளும், சுகமும் துக்கமும் நிறைந்தது. வாழ்வின் ஒவ்வொரு அசைவுக்கும் படைத்தவனிடம் நாம் பதில் சொல்லியாக வேண்டும்.

‘எனக்கான கடமைகளை நிறைவேற்றியிருக்கின்றேன்’ என்ற உணர்வுடன் வாழ்க்கையை நகர்த்துவதே அபார மகிழ்ச்சி தரும் விஷயம்தான். அதேசமயம் சொந்தக் கவலைகளை அகற்றி வைத்து, அடுத்தவருடைய மகிழ்ச்சிக்காக தியாகம் செய்ய முடியும் என்றிருந்தால் அந்த வாழ்வு தரும் சுகமே தனிதான்.

சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், ‘வாழ்வு என்பது அறிந்து அனுபவிக்க வேண்டிய ஒரு சுகந்த அனுபவம்’. அவ்வாறு வாழ முற்படுகின்றவர்களுக்கு மரணம்கூட நிம்மதியான அனுபவமாக மாறலாம்.

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு ஒருசில வழிகாட்டுதல்களும் வழிமுறைகளும் அவசியம் தேவைப்படுகின்றன. ஏனைய உயிரினங்களைப் போன்று சுதந்திரமாக அவனை விட்டுவிட்டால், அதன் பலாபலன் சர்வ நாசமாக இருக்கும். பெரும் குழப்பங்களே எஞ்சி நிற்கும். எனவே இந்த வழிகாட்டுதல்களை வழங்குவது யார்? இதுதான் தலையாய வினா.

ஒவ்வொருவரும் தங்களது மனோஇச்சையின் அடிப்படையில் வாழ்வுக்கான வியாக்கியானங்களைக் கொடுக்க முயன்றால், சிலபோது மானுட வர்க்கம் நிலைத்திருப்பதே பேராபத்தில் சென்று முடியலாம். மனித வாழ்வுக்கான வழிகாட்டுதல்களை மனிதனே வழங்கினால் அவற்றில் மனிதப் பலவீனங்கள் கண்டிப்பாகக் கலந்திருக்கும். இங்குதான் மனிதனுக்கு தெய்வீக வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.

வாழ்வு குறுகிய காலம் மட்டுமே

வாழ்வு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே மரணமும் சத்தியமானது. எல்லா உடல்களும் மரணத்தின் சுவையை சுவைத்தே தீருகின்றன என்று குர்ஆன் மரணத்தைக் குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றது: “ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க வேண்டியதாய் இருக்கின்றது” (29:57)

சுவை என்றால் என்ன? இனிப்பு, கசப்பு, சிலபோது உவர்ப்பு, இந்த ருசிகளையே நாம் சுவை என்கிறோம். எனவே மரணம் சிலருக்கு இனிப்பாக இருக்கலாம். சிலருக்குக் கசப்பாக இருக்காலாம். வேறுசிலருக்கு உவர்ப்பாகவும் இருக்கலாம். வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதன் அடிப்படையில்தான் மரணத்தின் சுவையும் அமையும்.

சுவை எவ்வாறு இருந்தாலும் வாழ்வின் இறுதி முடிவல்ல மரணம். மாறாக வாழ்வின் தொடர்ச்சிதான் மரணம் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. மறுமை வாழ்வின் விசாலமான கதவுகளை திறந்து தருவதுதான் மரணம். மரணத்துக்கு வரம்புகள் கிடையாது. சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடோ, ஆண்-பெண் என்ற பாகுபாடோ கிடையாது.

மரணம் வந்துவிட்டால் அனைத்தையும் விட்டுவிட்டுச் சென்று விடவேண்டியதுதான். நம்முடைய மரணத்துக்காக உலகம் தவித்துப்போகும் என்பதோ, உலகமே அழும் என்பதோ கிடையாது. நமக்காக அழும் ஒருசிலர்கூட கொஞ்ச நாட்கள்தான் அழுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நமக்காகக் கண்ணீர் சிந்தவோ, நம்மைக் குறித்து நினைக்கவோகூட யாரும் இருக்க மாட்டார்கள்.

மனிதனுக்கு அறிவும் தேவை, ஆன்மிகமும் தேவை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்க வேண்டும். இரண்டையும் தனித்தனியாகப் பிரிக்கும்போதுதான் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

‘அறிவும் மட்டும் போதும், ஆன்மிகம் தேவையில்லை’ என்று கூறும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கின்றார்கள். ‘ஆன்மிகம் மட்டும் போதும், அறிவு தேவையில்லை’ என்று கூறும் வேறொரு மக்கள் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அறிவும் ஆன்மிகமும் ஒன்றாக இணையும்போதுதான் இறைவழிகாட்டுதலை புரிந்துகொள்ள முடியும். இறைவழிகாட்டுதல்கள், மனிதனை மனிதனுக்கு அழகாக அறிமுகம் செய்து வைக்கும்.

நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எப்படி வாழவேண்டும்? என்பதற்கான பதில்களை எல்லாம் இறைவழிகாட்டுதல்கள் மட்டுமே அழகாகச் சொல்லித்தரும்.

மனிதக் கொள்கைகளும், தத்துவங்களும் மாற்றத்திற்கு உள்ளாகும். காலத்தால் மாறலாம். இடத்தால் மாறலாம். மனிதப்பலவீனங்களால் மாறலாம். ஆனால் இறைவழிகாட்டுதல்கள் அவ்வாறல்ல. ஒருபோதும் மாறாதவை.

மேலை நாடுகளைப் பாருங்கள். வசதியற்ற மக்களுக்கு அரசே உணவு கொடுக்கிறது. வேலை கொடுக்கிறது. வருமானத்திற்கு வழி செய்து கொடுக்கிறது. எல்லாம் கிடைக்கிறது. எல்லாம் கிடைத்த பின்பும் கவலையும், விரக்தியும் மக்களைப் பீடித்திருக்கின்றன.

எல்லாம் கிடைத்த பின்னரும் மணவிலக்குகள் பெருகின. எல்லாம் கிடைத்த பின்னரும் பெற்றோர் இல்லாத குழந்தைகள் பெருகினர். எல்லாம் கிடைத்த பின்னரும் ஆதரவற்ற நிலையில் விடப்படும் பெற்றோர்கள் பெருகினர். எல்லாம் கிடைத்த பின்னரும் ஓராயிரம் பிரச்சினைகள் பெருகிக்கொண்டே போயின. இறுதியில் மனிதன் திகைத்து நிற்கின்றான்.

ஆக, மனிதனுக்குத் தேவை இறைவழிகாட்டுதல் அடிப்படையிலான வாழ்க்கை. அந்த வாழ்க்கைதான் மனநிம்மதியைத் தரும்.

- மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான்: நபிகள் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.