ஜோதிட ரீதியிலான மூன்றுவித கடன்கள்-பரிகாரங்கள்


ஜோதிட ரீதியிலான மூன்றுவித கடன்கள்-பரிகாரங்கள்
x
தினத்தந்தி 17 March 2020 10:27 AM GMT (Updated: 17 March 2020 10:27 AM GMT)

‘கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற பழமொழியில் இருந்து, கடன் ஒரு வருக்கு மீள முடியாத துயரத்தை கொடுக்கிறது என்பதை உணர முடியும்.

பணம் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் என அனைவரது வாழ்விலும், அவரவர் தகுதிக்கு ஏற்ப கடன் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஒரு சிலருக்கு கடனை திருப்ப செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு கடனே வாழ்க்கையை முடித்து விடுகிறது. ஒருவரின் ஜனன ஜாதகம் எப்படி அமைகிறதோ, அதன்படி தான் கடன் வாழ்க்கை, கடன் படாத வாழ்க்கை அமைகிறது.

கடன் ஏற்படக் காரணங்கள்

லக்னத்திற்கு 6-ம் இடம் என்பது ருண, ரோக , சத்ரு ஸ்தானம் ஆகும். ‘ருணம்’ என்றால் கடன். ‘ரோகம்’ என்றால் நோய். ‘சத்ரு’ என்றால் எதிரி. 6-ம் அதிபதியோ , 6-ல் நின்ற கிரகமோ அல்லது 6-ம் அதிபதியின் நட்சத்திரங்களோ தான், ருண - ரோக - சத்ரு ஸ்தானத்தை இயக்குபவர்கள். இந்த 6-ம் பாவக காரகர்கள் சனி மற்றும் செவ்வாய்.

ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து 3, 6, 8, 12 ஆகிய 4 பாவகங்களும், ‘துர் ஸ்தானங்கள் அல்லது ‘மறைவு ஸ்தானங்கள்’ எனப்படும் . ஒருவர் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை பரிபூரணமாக தருவது இந்த மறைவு ஸ்தானங்களே. இந்த மறைவு ஸ்தானங்கள் ஆட்சி, உச்சம் பெறாமல், கேந்திர, திரிகோணம் பெறாமல் வலுக்குன்றியிருப்பின், விபரீத ராஜ யோகம் எனப்படும் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். இவர்கள் அடுத்தவர் பொருளை அனுபவிக்கும் யோகம் பெற்றவர்களாக இருப்பர். மறைவு ஸ்தானங்கள் வலு பெற்றவர்களுக்கு நோயும் கடனும் தேடி வரும்.

மனித வாழ்வையே தடம் புரட்டி போடும் வலிமை, கோட்சார கிரகங்களுக்கு உண்டு. தசா, புத்தியோடு தொடர்பு பெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவாக இருக்கும். அதேநேரம் தசா, புத்தியோடும் அதன் அதிபதிகளோடும் தொடர்பு பெறும் கோட்சார கிரகங்கள், சாமானியர்களை கூட உருத் தெரியாமல் செய்து விடும் வலிமை கொண்டது.

ஜனன கால ஜாதகத்தில் குரு, சனி, ராகு - கேதுவுடன் உள்ள தொடர்பே கடன் ஏற்படும் காலத்தையும், நிவாரணம் ஏற்படும் காலத்தையும் உணர்த்தும். லக்னம், லக்னாதிபதி பலமாக இருந்தால் கடன் அடைபடும். லக்னம், லக்னாதிபதி வலிமை இழந்தவர்கள் படும் அவஸ்த்தை அளப் பரியது.

கடன் என்றாலே கர்மா தான். காசு, காமம், சொத்து என்ற மூன்றின் மூலமே கர்மா உருவாகிறது. நமது முன்னோர்கள் கர்ம வினையை மூன்று வகையாக பிரிக்கிறார்கள். அதை மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினை களாக பெற்று அனுபவிக்கிறான். அவை:- சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம்.

சஞ்சித கர்மம்

தாய், தந்தையிடம் இருந்தும், நமது முன்னோர் களிடம் இருந்தும் நமது ஆத்மா பல்வேறு பிறப்புகளில் செய்த பாவ புண்ணியங்களின் சேர்க்கை. இதனையே ‘சஞ்சித கர்மம்’ என்கிறார்கள். இது கரு உருவாகும் போதே உடன் உருவாவது.

* 3 , 6 , 10 , 11 எனும் உப ஜெய ஸ்தானத்தோடு, 6-ம் இடம் சம்பந்தம் பெறும் போது உடன் பிறந்தவர்கள் , இளைய மனைவி , காதலர்கள், அதீத அன்பால் ஒருவர் பிரச்சினையை அடுத்தவர் சுமப்பது, தொழில், உத்தியோகத்தினால் கடன் உருவாகும்.

* 5, 6-ம் பாவகம் சம்பந்தம் பெறும் போது, குழந்தைகளின் நலனுக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

* 6, 7-ம் பாவகம் சம்பந்தம் பெறும் போது, நண்பர்கள், தொழில் கூட்டாளி, களத்திரத்தின் மூலமாக கடன் உண்டாகும்.

* 6 , 9-ம் பாவக இணைவால் பூர்வீக சொத்தைக் காப்பாற்றவும், தந்தையாலும் கடன் வந்து சேரும்.

ஆக சஞ்சித கர்மா என்பது சென்ற பிறவியில், முன்னோர்களால் உருவான கடனை இந்த பிறவியில் தீர்க்க எடுக்கும் முயற்சியால் வரும் கடனாகும்.

பிராப்த கர்மா

இந்த பிறவியில் தான் செய்யும் செயல்களின் பதிவே, ‘பிராப்த கர்மா’ எனப்படும். இந்த கர்மாவால் வரும் பலனையும், நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்க வேண்டும்.

* 1, 2, 4, 6-ம் பாவக சம்பந்தம் நவநாகரிக உலகின், லெளகீக இன்பங்களான வீடு, வாகனம், ஆடம்பர பொருட்களை அனுபவிக்க ஜாதகரால் இந்த பிறவியில் உருவாக்கப்படும் சுய கடன்.

ஆகாமிய கர்மா

மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்க செய்யும் செயல்கள் மூலம், இந்தப் பிறவியில் சேர்க்கும் புதிய வினைக்கு ‘ஆகாமிய கர்மா’ என்று பெயர்.

* புதன், சனி, ராகு-கேது போன்ற கிரகங்களின் தசை நடக்கும் போது, சுய தேவைக்காக, பணம், பொருளால் ஏமாற்றப்படுதல், பரிவு மிகுதியால் ஜாமீன் போட்டு கடனையும் சத்ருவையும் உருவாக்கி, வட்டிக்கு வட்டி கட்டி, சொல்ல முடியாத துயரம் ஏற்படும்.

* 6, 8,12-ம் பாவக இணைவால் போலீஸ் நிலையம் செல்லுதல், நீதிமன்ற வழக்கு, கட்ட பஞ்சாயத்துக்களால் நஷ்டம், அவமானம், தற்கொலை எண்ணம், சிறை தண்டனை உருவாகும். இவர்களில் பெரும்பாலானோர், பங்குச்சந்தை, சீட்டு மோசடி, குதிரை பந்தயம் போன்றவற்றால் பணத்தை தொலைத்து கடனாளியானவர்களாக இருப்பார்கள்.

பரிகாரம்

மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரங்கள் உண்டு. கடன் தொல்லை என்பது ஒரு மனிதருக்கு வரக்கூடாத பிரச்சினைதான். வந்த பிறகு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், நம் முன்னோர்கள் கூறியுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக கடன் தொல்லைகள் தீரும்.

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதும் திருப்பிக் கொடுக்கும் வகையில் வாய்ப்பு வசதிகள் உருவாகும் . அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பெயர். இந்த முகூர்த்தத்தில் கடனின் ஒரு சிறு தொகையை கொடுத்தால் கொடுக்க வேண்டிய கடன் தொகை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் விரைவில் தீர்ந்துவிடும். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும் சனிக்கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.

செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பித் தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித்தரலாம். சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

சார்வரி வருட மைத்ர முகூர்த்தம்

23.4.2020 வியாழன் காலை 6.22 மணி முதல் காலை 8.22 மணி வரை

8.5.2020 வெள்ளி மாலை 6.24 மணி முதல் இரவு 8.24 மணி வரை

20.5.2020 புதன் அதிகாலை 4.24 மணி முதல் காலை 6.24 மணி வரை

5.6.2020 வெள்ளி மாலை 4.24 மணி முதல் 6.24 மணி வரை

16.6.2020 செவ்வாய் அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை

2.7.2020 வியாழன் மதியம் 3.05 மணி முதல் மாலை 5.05 மணி வரை

13.7.2020 திங்கள் இரவு 12.12 மணி முதல் 2.12 மணி வரை

18.7.2020 சனி காலை 6.08 மணி முதல் 8.08 மணி வரை; மதியம் 12.08 மணி முதல் 2.08 மணி வரை; மாலை 6.08 மணி முதல் இரவு 8.08 மணி வரை

29.7.2020 புதன் மதியம் 1.52 மணி முதல் 3.52 மணி வரை

9.8.2020 ஞாயிறு இரவு 10.32 மணி முதல் 12.32 மணி வரை

26.8.2020 புதன் மதியம் 12.36 மணி முதல் 2.36 மணி வரை

6.9.2020 ஞாயிறு இரவு 8.48 மணி முதல் 10.48 மணி வரை

22.9.2020 செவ்வாய் காலை 10.20 மணி முதல் மதியம் 12.20 மணி வரை

3.10.2020 சனி இரவு 7 மணி முதல் 8.32 மணி வரை

20.10.2020 செவ்வாய் காலை 8.12 மணி முதல் 9.38 மணி வரை

30.10.2020 வெள்ளி மாலை 4.45 மணி முதல் 6.45 மணி வரை

31.10.2020 சனி மாலை 4.49 மணி முதல் 6.49 மணி வரை

16.11.2020 திங்கள் காலை 6.08 மணி முதல் 8.08 மணி வரை

27.11.2020 வெள்ளி மாலை 4.01 மணி முதல் 6.01 மணி வரை

12.12.2020 சனி காலை 10.46 மணி முதல் 12.46 மணி வரை; மாலை 4.46 மணி முதல் 6.46 மணி வரை; இரவு 10.46 மணி முதல் 12.46 மணி வரை

13.12.2020 ஞாயிறு காலை 4.23 மணி முதல் 6.23 மணி வரை

24.12.2020 வியாழன் மாலை 3.16 மணி முதல் 5.16 மணி வரை

10.1.2021 ஞாயிறு காலை 5.18 மணி முதல் 7.18 மணி வரை

20.1.2021 புதன் மதியம் 2 மணி முதல் 2.55 மணி வரை

21.1.2021 வியாழன் மதியம் 1.10 மணி முதல் 3.10 மணி வரை

17.2.2021 புதன் காலை 10.32 மணி முதல் 12.32 மணி வரை

5.3.2021 வெள்ளி இரவு 11.05 மணி முதல் 1.05 மணி வரை

16.3.2021 வெள்ளி காலை 8.04 மணி முதல் 10.04 மணி வரை

1.4.2021 வியாழன் இரவு 8.48 மணி முதல் 10.48 மணி வரை

13.4.2021 செவ்வாய் காலை 5.45 மணி முதல் 7.45 மணி வரை

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று.

விகாரி வருட மைத்ர முகூர்த்தம்

21.3.2020 சனி காலை 8.39 மணி முதல் 10.39 மணி வரை

26.3.2020 வியாழன் காலை 6.52 மணி முதல் 8.52 மணி வரை

27.3.2020 வெள்ளி காலை 6.56 மணி முதல் 8.56 மணி வரை

11.4.2020 சனி இரவு 8.12 மணி முதல் 10.12 மணி வரை

- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி


Next Story