மணவாழ்வை உறுதிப்படுத்தும் பங்குனி உத்திரம்


மணவாழ்வை உறுதிப்படுத்தும் பங்குனி உத்திரம்
x
தினத்தந்தி 23 March 2021 1:21 AM GMT (Updated: 23 March 2021 1:21 AM GMT)

குருவின் அருள் நிறைந்த மாதமாக, பங்குனி மாதம் விளங்குகிறது. குருவின் வீடான மீன ராசிக்குள், சூரியன் பிரவேசிக்கும் மாதம் இது.

குருவின் அருள் நிறைந்த மாதமாக, பங்குனி மாதம் விளங்குகிறது. குருவின் வீடான மீன ராசிக்குள், சூரியன் பிரவேசிக்கும் மாதம் இது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதானால், நவக்கிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியரான குருவின் வீட்டிற்குச் செல்லும் மாதமே பங்குனி. அப்படியானால் அதன் சிறப்பை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் தெய்வங்களே, மங்கல நிகழ்வுகளுக்காக தேர்ந்தெடுத்துக் கொண்ட மாதமாகவும் பங்குனி விளங்குகிறது. அதிலும் பங்குனி உத்திரம் மேன்மை வாய்ந்ததாக திகழ்கிறது.

மாதத்தில் 12-வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் தினமான ‘பங்குனி உத்திரம்’ நாளை, தெய்வங்களே தேர்வு செய்திருக்கிறார்கள் என்பது எத்தனை சிறப்புக்குரியது. இந்த பங்குனி உத்திர நாளில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. இந்த நாளில் பல தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற காரணத்தால், இதனை ‘கல்யாண விரதம்’ என்றும் அழைப்பார்கள்.

பங்குனி உத்திரம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பால், பழம் அருந்தலாம். அப்படிச் செய்ய முடியாதவர்கள், ‘ஓம் சரவணபவ’ என்ற நாமத்தையாவது தினந்தோறும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உச்சரித்து வர நன்மைகள் நம்மை தொடரும். நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்குச் சென்று அர்ச் சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று வரலாம்.

திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இன்றைய தினம் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் நிச்சயம் திருமணம் கைகூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரு வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு. இந்த நல்ல நாளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று, அங்கு நடைபெறும் அபிஷேக அலங்காரங்களையும், தீபாராதனையையும் கண்டு வரலாம். இதன் மூலம் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

திருமணமான தம்பதியினர் இடையே, ஏதாவது கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினைகள் வந்தால், பங்குனி உத்திரம் அன்று விரதம் இருக்கலாம். இதனால் கணவன்- மனைவி இடையேயான பிரச்சினை உடனடியாக விலகும். கணவன்-மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவி புரியும். அதோடு வீட்டில் உள்ள பொருளாதார பிரச்சினைகள் விலகி, செல்வச் செழிப்பை வழங்கும் விரதமாகவும் இது திகழ்கிறது. பொதுவாக ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் கோவிலுக்குச் சென்று, புதியதாக மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்துக் கட்டிக்கொள்வார்கள். அதே சடங்குகளை பலர் இந்த பங்குனி உத்திர நாளிலும் செய்வது வழக்கமாகும்.

தெய்வ நிலையை அடைய உதவும் விரதமாகவும், பங்குனி உத்திர விரதம் விளங்குகிறது. எவர் ஒருவர் தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருக்கிறாரோ அவருக்கு மறுபிறவியானது தெய்வப்பிறவியாக அமையும். அதோடு அவர் பிறப்பு இறப்பு என்ற காலச் சக்கரத்தில் இருந்து விடுபட்டு மோட்ச நிலையை அடைவார் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.

தட்சனின் மகளாக பிறந்த சாபம் நீங்குவதற்காக, மீண்டும் மலையரசன் இமயவானின் மகளாக பார்வதி என்ற பெயரில் அம்பிகை அவதரித்தாள். அந்தப் பிறவியிலும் ஈசனை அடைவதற்காக கடும் தவம் இருந்தாள். அப்போது சிவபெருமான், தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் ஆழ்ந்திருந்தார். இந்த காலகட்டத்தில் அசுரர்கள் வளர்ச்சி ஓங்கியது. அவர்கள் அனைவரும் தேவர்களை துன்புறுத்தினர். இதனால் தேவர்கள் அனைவரும், மன்மதனின் உதவியுடன் சிவபெருமானின் தவத்தைக் கலைத்தனர். பின்னர் அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி அவரிடம் கூறினர். உடனே ஈசன், ‘தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை படைப்பதாக’ கூறினார். அதன் பின்னர் பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்திரத்தன்று அவருக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வந்தால் நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ சுவாமி-அம்பாளின் அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

Next Story