நரசிம்மரைப் பற்றி...


நரசிம்மரைப் பற்றி...
x
தினத்தந்தி 17 May 2021 10:30 PM GMT (Updated: 17 May 2021 8:06 PM GMT)

நரசிம்மருக்கு, ‘சிங்கபிரான்’, ‘அரிமுகத்து அச்சுதன்’, ‘சீயம்’, ‘நரம் கலந்த சிங்கம்’, ‘அரி’, ‘ஆனரி’ ஆகிய பெயர்களும் உண்டு.

* திருமாலின் அவதாரங்களில், நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

* திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமானவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. அதே நேரம் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

* இரணியகசிபுவின் ரத்தத்தை குடித்ததால், நரசிம்மருக்கு உக்கிரம் அதிகரித்தது. இந்த உக்கிரத்தால் அவரின் அருகில் செல்லவே அனைவரும் அஞ்சினர். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் சிதைத்தார், நரசிம்மர். இதையடுத்து சிவபெருமான், சரபப்பறவையாக வடிவெடுத்து நரசிம்மரின் சீற்றத்தை தணித்தார்.

* சிவபெருமானை வணங்கிவந்த ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் உடனடியாக அவருக்கு நரசிம்மர் காட்சியளித்தார்.

* நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

* உலகில் உள்ள அனைத்து பொருட்களின் உள்ளேயும் சூட்சுமமாக இறைவன் இருக்கிறான். இதை பக்தர்களுக்கு உணர்த்துவதற்காகவே, நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார்.

* நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

* நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்றும் பொருள் உண்டு.

* இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை, ஈரேழு உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

* மகாலட்சுமிக்கு ‘பத்ரா’ என்றும் ஒரு பெயர் உண்டு. லட்சுமியை தன்னுடைய மடி மீது வைத்திருப்பதால் நரசிம்மருக்கு ‘பத்ரன்’ என்று பெயர். ‘பத்ரன்’ என்றால் ‘மங்களமூர்த்தி’ என்று பொருள்.

* ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உபபுராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

* நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

Next Story